பாட்னா,
பீகாரில் பெண் போலீசார் வேலை நேரத்தில் முகத்தில் மேக்கப், லிப்ஸ்டிக் பவுடர் ஆகியவற்றை போடக்கூடாது என்று பீகார் மாநில காவல்துறை தலைமையகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. மேலும் அவர்கள் பணி நேரத்தின் போது நகைகள் அணியவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பெண் போலீசார் பணி நேரத்தின் போது சீருடையில் நகைகள் அணிந்து கொண்டும், முகத்தில் மேக்கப், லிப்ஸ்டிக், பவுடர் பூசிக்கொண்டும் ‘ரீல்ஸ்’ செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பணியில் இருக்கும்போது பெண் போலீசார் மேக்கப், லிப்ஸ்டிக் பயன்படுத்துவதும். சீருடையை முறையற்ற வகையில் அணந்திருப்பதும் விதி மீறல் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமூக ஊடகங்களில் பதிவிட ரீல்ஸ் உருவாக்குதல், ஆயுதங்களை காட்சிப்படுத்துதல், பணியில் இருக்கும்போது இசை கேட்பதற்காகவோ அல்லது தனிப்பட்ட அழைப்புகளுக்காகவோ புளூடூத் சாதனங்களை பயன்படுத்துதல் ஆகியவையும் விதி மீறல்களாக பட்டியலிடப்பட்டு உள்ளன.
இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களை கடமைகளில் இருந்து திசைதிருப்பும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பணி நேரத்தில் நகைகள் மற்றும் பிற அழகுசாதனப் பொருட்களை அணிந்து ரீல்ஸ் தயாரித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்ட 10 பெண் போலீசார் மற்றும் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த உத்தரவு ஆண் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கும் பொருந்தும். அவர்கள் பணி நேரத்தில் சீருடைகளை முறையாக அணிய வேண்டும். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பீகார் காவல் தலைமையகம் எச்சரித்துள்ளது.