பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் கனககிரி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரா (வயது 42). இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 7 மாத குழந்தை இருந்தது. காய்கறி வியாபாரியான நாகேந்திரா மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், மதுபோதைக்கு அடிமையான அவர் தினமும் குடித்துவிட்டு வந்து ரம்யாவை தாக்கி உள்ளார்.
இந்தநிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி இரவு வேலை முடிந்து நாகேந்திரா வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் மதுகுடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த நாகேந்திரா மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளார். மதுகுடிக்க மீண்டும் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு ரம்யா மறுத்துள்ளார். அப்போது பணம் தரவில்லை என்றால் குழந்தையை கொன்றுவிடுவேன் என்று நாகேந்திரா மிரட்டினார். இதனால் கத்தி கூச்சலிட்டு ரம்யா அக்கம்பக்கத்தினரை அழைத்தார். அதற்குள் தராசு மற்றும் எடைக்கல்லை கொண்டு நாகேந்திரா குழந்தையை தாக்கி உள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே குழந்தை ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது. இதனை பார்த்த ரம்யா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வித்யாரண்யபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நாகேந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து நாகேந்திரா ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதுதொடர்பான வழக்கு மைசூரு மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி வி.எச்.தயானந்த் தீர்ப்பு வழங்கினார். அதில், 7 மாத குழந்தை அடித்துக்கொன்ற நாகேந்திராவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.