இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் யார்க்ஷயர் அணிக்காக இந்த ஆண்டு விளையாட இருந்தார். ஆனால் திடீரென்று அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். இது யார்க்ஷயர் கிளப்புக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 28 ருதுராஜ் ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, மீதமுள்ள ஐந்து போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தார். ஆனால், தனிப்பட்ட காரணங்களால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக கிளப் அறிவித்துள்ளது. இந்த முடிவு, போட்டி தொடங்க சில நாட்களே இருக்கும் நிலையில் எடுக்கப்பட்டுள்ளதால், யார்க்ஷயர் அணி மாற்று வீரரை தேடும் சிரமத்தில் உள்ளது.
மேலும் படிங்க: பிசிசிஐயின் ஆண்டு வருமானம் எவ்வளவு? அதில் IPL-இன் பங்கு எவ்வளவு தெரியுமா?
ருதுராஜ் கெய்க்வாட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், மகாராஷ்டிரா மாநில அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். அவர் இந்திய அணிக்காக 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் 2025 சீசனில் முழங்கை காயம் காரணமாக வெறும் 5 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். இந்த காயத்திலிருந்து மீண்டு, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்தியா ஏ அணியின் போட்டிகளில் பங்கேற்றார். இந்த அனுபவம் அவரை கவுண்டி கிரிக்கெட்டுக்கு தயார்படுத்தியது. ஆனால், தற்போது தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்த வாய்ப்பை தவிர்த்துள்ளார். யார்க்ஷயர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டனி மெக்ராத், இந்த முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.
மெக்ராத் கூறுகையில், “துரதிர்ஷ்டவசமாக, ருதுராஜ் தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு வரவில்லை. அவர் ஸ்கார்பரோ போட்டியிலோ அல்லது மீதமுள்ள சீசனிலோ பங்கேற்க மாட்டார். இது எங்களுக்கு பெரும் ஏமாற்றம். காரணங்கள் பற்றி விவரிக்க முடியாது, ஆனால் எல்லாம் சரியாக இருக்கும் என நம்புகிறோம். இப்போதுதான் எங்களுக்கு தெரிய வந்தது” என்றார். மேலும், மாற்று வீரரை தேடும் முயற்சியில் இருப்பதாகவும், ஆனால் நேர அழுத்தம் காரணமாக அது சவாலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “இரண்டு அல்லது மூன்று நாட்களே இருக்கின்றன. எனவே, என்ன செய்ய முடியும் என்பது தெரியவில்லை. பின்னணியில் வேலை செய்து வருகிறோம், ஆனால் நேரம் பிரச்சினை” என்று கூறினார்.
ருதுராஜ் கெய்க்வாட்டின் கிரிக்கெட் எதிர்காலம்
ருதுராஜ் கெய்க்வாட், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். அவர் 38 முதல் தர போட்டிகளில் விளையாடி, 41.77 சராசரியுடன் 2632 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 சதங்கள் அடங்கும். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது செயல்திறன் சிறப்பாக இருந்தாலும், டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க இன்னும் காத்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழும் அவர், கேப்டன் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக குறைவான போட்டிகளில் விளையாடியது அவரது ஃபார்மை சற்று பாதித்தது. ஆனால், இந்தியா ஏ அணியில் அவர் விளையாடியது, அவரது உடல் தகுதியை உறுதிப்படுத்தியது.
மேலும் படிங்க: தோனி அணிந்த ‘PIANO KEYS’ சட்டை.. இவ்வளவு விலையா? அப்படி என்ன ஸ்பெஷலா இருக்கு?