வாஷிங்டன்,
அமெரிக்காவின் ஒமாகா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து டெட்ராயிட் நோக்கி ஸ்கைவெஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கடந்த 17-ந்தேதி கிளம்பியது. அந்த விமானத்தில் 67 பயணிகளும், 4 விமான ஊழியர்களும் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், மரியோ நிக்பிரேலாஜ்(வயது 23) என்ற பயணி சக பயணிகளுடன் தகராறில் ஈடுபடத் தொடங்கினார். அவரை விமான பணிப்பெண் தடுத்து நிறுத்த முயன்றபோது, அவரை கீழே தள்ளிவிட்டதோடு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அவசரகால கதவையும் மரியோ திறக்க முயன்றார் என்று கூறப்படுகிறது.
இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினர். இதன் காரணமாக விமானம் லோவா மாகாணத்தில் உள்ள செடார் ரேபிட்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் விமான நிலைய அதிகாரிகள் தகராறில் ஈடுபட்ட மரியோவை விமானத்தில் இருந்து வெளியேற்றி செடார் ரேபிட்ஸ் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து விமானம் மீண்டும் டெட்ராயிட் நோக்கி புறப்பட்டது. மரியோவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.