மான்செஸ்டர்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.
தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய அணியில் நிறைய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளனர். இதனால் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மிக முக்கியான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? என்பதில் பெரிய கேள்வி நிலவுகிறது. ஏனெனில் இந்த தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் மற்றும் 3-வது போட்டிகளில் அவர் விளையாடி விட்டதால் இந்த 4-வது போட்டியில் அவர் விளையாடுவாரா? இல்லையா? என்பது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.
இருப்பினும் பும்ரா இந்த போட்டியில் நிச்சயம் விளையாட வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்று முகமது சிராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “அவர் (பும்ரா) விளையாடுவார். ஆனால் பந்துவீச்சு கூட்டணியில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும். இருப்பினும் சரியான இடங்களில் நாங்கள் பந்து வீச வேண்டும். எங்களது திட்டம் மிக எளிதானது. கடந்த ஆட்டத்தைப் பார்த்தீர்களானால், அவர்கள் (இங்கிலாந்து) மிகுந்த பொறுமையுடன் பேட்டிங் செய்தனர். உண்மையான டெஸ்ட் கிரிக்கெட் அதுதான் என்று நாங்கள் உணர்ந்தோம்” என கூறினார்.