பாஜக சூழ்ச்சியால் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி ஐஏஎஸ் அகாடமி தொடங்க இருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இதில் இலவசமாக படிக்கலாம். இதன் வேந்தராக நாசே ராமசந்திரன் நியமிக்கப் பட்டுள்ளார். செயலாளராக பீட்டர் அல்போன்ஸ், இணை செயலாளர்களாக கே.வி.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி ஆகியோர் செயல்படுவார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளில் இதனை தொடங்க இருக்கிறோம்.

ராஜேந்திர சோழனுக்கு விழா எடுத்து இருக்கிறோம் என பிரதமர் மோடி வட மாநிலத்தில் பேச வேண்டும். 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.3 லட்சம் கோடி கொடுத்து இருப்பதாக மோடி கூறுகிறார். அமித்ஷா ரூ.6.80 லட்சம் கோடி என்று சொல்லிகிறார். எல்.முருகன் ரூ.12 லட்சம் கோடி என்று சொல்லிகிறார். இதில் யார் சொல்வது உண்மை ?

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது தான் அதிக நிதி தமிழகத்துக்கு கொடுத்துள்ளது. உயிர் காக்கும் மருத்துவ கருவிக்கு கூட ஜி.எஸ்.டி வரி விதித்தது தான் மத்திய பாஜக அரசு. 11 ஆண்டு ஆட்சி காலத்தில் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பாக கூறி வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் ஏன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழிசை தனியார் மருத்துவ மனையில் தான் பணி செய்தார். அவர் ஏன் அரசு மருத்துவமனையில் பணி செய்யவில்லை ?. டெல்லி தலைமையுடன் ஆலோசனை நடத்தி காலியாக இருக்கும் மாவட்ட தலைவர்கள் பதவிகள் ஒரு வாரத்தில் நியமிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலிமையாக இருக்கிறது. எங்கள் கூட்டணி எஃகு கோட்டையாக உள்ளது. இங்கு ஒரு செங்கலை கூட உருவ முடியாது.

ஓ.பன்னீர்‌ செல்வம் தர்மயுத்தம் செய்ததற்கு வழிகாட்டியது யார்? பின்னர் அதிமுக-வை 4 ஆக உடைத்தனர். பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தியது யார்? இப்போது அவரை முழுமையாக கைவிட்டு விட்டனர். இதுதான் ஆர்எஸ்எஸ், பாஜக-வின் சித்தாந்தம். அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.