India vs England, Oval Test : ஓவலில் நடக்கும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 23 ரன்கள் இந்தியா பின்தங்கியிருந்த போதிலும், மூன்றாவது நாளில் 2வது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி பிளேயர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் நைட் வாட்ச்மேன் ஆகாஷ் தீப் ஆகியோரின் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது, இந்திய அணியை வலுப்படுத்தியது. ஜெய்ஸ்வால் தனது ஆறாவது டெஸ்ட் சதத்தை அடித்தார், அதே நேரத்தில் ஆகாஷ் தீப் தனது முதல் அரைசதத்தை அடித்து, 66 ரன்களுடன் தனது முதல் தர கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார்.
அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் தலா அரைசதங்களை அடித்து, இங்கிலாந்துக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தனர் மான்செஸ்டரில் நடந்த முதல் டெஸ்டில் சதம் அடித்த ஜடேஜா, ஓவல் டெஸ்டின் மூன்றாவது நாளில் 53 ரன்கள் எடுத்து, இந்தத் தொடரில் மொத்தமாக 516 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம், ஒரு டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்த பட்டியலில் சுப்மன் கில் (754) மற்றும் கே.எல். ராகுல் (532) ஆகியோர் ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர்.
மூன்று இந்திய பேட்டர்கள் ஒரு டெஸ்ட் தொடரில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுப்பது இதுவே முதல் முறையாகும். மூன்றாவது நாளில் 75 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா, ஜெய்ஸ்வாலின் சதத்தால் மேலும் வலுப்பெற்றது. 164 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 118 ரன்கள் எடுத்தார். ஆகாஷ் தீப் தனது முதல் அரைசதத்தை அடித்து 94 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார்.
இந்தத் தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜடேஜா, மீண்டும் ஒரு முக்கியமான அரைசதத்தை அடித்தார். அவர் 77 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். இது இந்த தொடரில் அவர் அடித்த ஐந்தாவது அரைசதம் ஆகும். கடைசி கட்டத்தில், சுந்தர் 46 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக 53 ரன்கள் சேர்த்தார். கடைசி விக்கெட்டுக்கு பிரசித் கிருஷ்ணாவுடன் இணைந்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்தியாவின் முன்னிலையை 350 ரன்களுக்கு மேல் உயர்த்தினார். முடிவில் 373 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணியில், ஜோஷ் டாங் 125 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்பிறகு இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. 4வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இப்போட்டி டிரா ஆக வாய்ப்பில்லை. இந்தியா, இங்கிலாந்து இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இந்தியா வெற்றி பெற்றால் தொடர் சமனாகும், இங்கிலாந்து வெற்றி பெற்றால் அந்த அணி தொடரைக் கைப்பற்றும். விறுவிறுப்பான போட்டி இன்று காத்திருக்கிறது.
மேலும் படிங்க: 2011ஆம் ஆண்டுக்கு பின் இவர்தான்.. ஆகாஷ் தீப் சாதனை படைப்பு!
மேலும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் காதலிகள் லிஸ்ட்.. யுஸ்வேந்திர சஹாலின் EX-மனைவியுமா?