நியூயார்க்,
காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கு இடையே போர் உக்கிரமான நிலையை எட்ட இருந்த நிலையில், திடீரென இரு நாடுகளும் பரஸ்பரம் போர் நிறுத்தத்தை மேற்கொண்டன.
இந்த நிலையில் தான் முன்னின்று தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி கேட்டுக்கொண்டதால் தான் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின.
இந்த நிலையில், நேற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து-கம்போடியா, காங்கோ மற்றும் ருவாண்டா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையேயான மோதல்களை தான் தலையிட்டு தீர்த்து வைத்ததால், அவை நிறுத்தப்பட்டன என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் நிறைய போர்களைத் தீர்த்து வைத்தேன். ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை முடித்து வைத்தேன் என்று நினைக்கிறேன். ஆனால், உங்களுக்குத் தெரியும், நாங்கள் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போர் விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீண்டும் இவ்வாறு கருத்து கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.