வாஷிங்டன்:
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்தால், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்ப் பொருட்கள் கொள்முதலை இந்தியா குறைத்துவிட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், வழக்கம்போல எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதி உதவி செய்து வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் செல்வாக்கு மிக்க ஆலோசகராக இருக்கும் ஸ்டீபன் மில்லர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:இந்தியாவுடன் டிரம்ப் மிகப் பெரிய உறவை விரும்புகிறார். இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் அவர் எப்போதும் மிகப் பெரிய உறவைக் கொண்டுள்ளார். ஆனால், ரஷ்யா-உக்ரைன் போருக்கு நிதியளிப்பதைக் கையாள்வது குறித்து நாம் உண்மையாக இருக்க வேண்டும். இதனால், ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரை நிறுத்த, ராஜதந்திர ரீதியாகவும், நிதி ரீதியாகவும், வேறு விதமாகவும் கையாள, டிரம்ப் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும். இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தப் போருக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என டிரம்ப் மிகத் தெளிவாகக் கூறினார். எண்ணெய் வாங்குவதில் இந்தியா அடிப்படையில் சீனாவுடன் இணைந்திருப்பதாக மக்கள் அறிந்தால் அதிர்ச்சியடைவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.