தொடரில் 1113 பந்துகளை வீசிய முகமது சிராஜ்… பிரியாணி, பிட்சாவுக்கு நோ – டயட் ரகசியம்!

Mohammed Siraj Fitness And Diet: இந்திய டெஸ்ட் அணி சமீப காலங்களில் அந்நிய மண்ணில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகின்றன. 2018, 2021இல் ஆஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்றியது; 2023இல் தென்னாப்பிரிக்காவில் தொடரை சமன் செய்தது; 2021, 2025இல் இங்கிலாந்தில் தொடரை சமன் செய்திருப்பது என இந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை குறிப்பிடலாம். 

இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு படை கடும் முன்னேற்றத்தை அடைந்திருப்பதை குறிப்பிடலாம். இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள். விராட் கோலி – ரவி சாஸ்திரி ஜோடி தங்கள் தலைமையின் கீழ் வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் நாம் கவனித்தாக வேண்டும். 

Mohammed Siraj: இந்தியாவை தூணாக தாங்கிய சிராஜ் 

அந்த வகையில், விராட் கோலி கேப்டனாக இருந்தபோது பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் முகமது சிராஜை கண்டறிந்து அவரை இந்திய அணிக்குள் கொண்டுவந்தார். அப்போது இருந்து சிராஜ், விராட் கோலியின் படையின் முக்கிய வீரர் ஆனார். 2017இல் ஹைதராபாத் அணியில் விளையாடிய சிராஜ், 2018இல் ஆர்சிபி அணிக்குள் வந்தார். 2024 சீசன் வரை அவர் ஆர்சிபியிலேயே இருந்தார். 2025 சீசனில் குஜராத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

2021 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இந்தியா பெற்ற வரலாற்று வெற்றிக்கு சிராஜ் முக்கிய காரணம். அதன்பின், 2021இல் லார்ட்ஸ் வெற்றிக்கும் சிராஜின் பங்கும் அதிகம். அதேபோல், தற்போது ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்ததற்கும் சிராஜின் பங்கு அதிகம். கடைசி போட்டியில் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை, இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றியது, நடப்பு தொடரில் மட்டும் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்த பௌலர் என சிராஜ் ஒற்றை தூணாக இந்தியாவை இந்த தொடரில் சுமந்திருக்கிறார் எனலாம்.

Mohammed Siraj Diet: முகமது சிராஜ் உணவுமுறை

இதை விட சிராஜ் இந்த தொடரில் வீசி உள்ள ஓவர்களை நாம் கவனிக்க வேண்டும். கடைசி போட்டியில் மட்டும் 46.1 ஓவர்களை வீசியிருக்கிறார். 5 போட்டிகளிலும் விளையாடி மொத்தம் 185.3 ஓவர்களை வீசியிருக்கிறார். அதாவது 1113 பந்துகள். கடந்த டிசம்பர் – ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் முகமது சிராஜ் 5 போட்டிகளிலும் விளையாடி 157.1 ஓவர்களை, 943 பந்துகளை வீசியிருந்தார். முகமது சிராஜ் இந்தளவிற்கு அர்ப்பணிப்போடு விளையாடுவது பல முன்னணி வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நடப்பு தொடரில் அவர் பந்துவீசிய வேகமும் குறிப்பிடத்தக்கது. 

இந்தளவிற்கு ஆற்றலுடனும், உடற்தகுதியுடனும் முகமது சிராஜ் பந்துவீசுவதற்கு என்ன ரகசியம்… அவரது உணவுமுறை என்ன என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், முகமது சிராஜின் சகோதரர் முகமது இஸ்மாயில், சிராஜ் உணவுப்பழக்கம் குறித்தும், பிட்னஸ் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Mohammed Siraj Diet: பிரியாணி, பிட்சாவை தொடவே மாட்டாராம்… 

அதில், “அவர் (சிராஜ்) உடற்தகுதியில் அதிகம் கவனம் செலுத்துவார். நொறுக்குத் தீனிகள், துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றுகிறார். ஹைதராபாத்தில் இருந்தாலும் கூட, அவர் எப்போதாவதுதான் பிரியாணி சாப்பிடுவார். அதுவும் குறைவுதான், மேலும் வீட்டில் சமைத்த பிரியாணி மட்டும்தான் சாப்பிடுவார். பிட்சா சாப்பிட மாட்டார், துரித உணவுகளை தொடக் கூட மாட்டார். அவர் உடலை மிக ஒழுக்கமாக பார்த்துக்கொள்வார்” என தெரிவித்துள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபி அணியில் இருந்து முகமது சிராஜ் விடுவிக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அப்போது கூட சிராஜ் மனதை தளரவிடவில்லையாம். இதுகுறித்து முகமது இஸ்மாயில் கூறுகையில், “100%, அவர் ஒருபோதும் மனதை தளரவிடவில்லை, சாம்பியன்ஸ் டிராபி அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்படாதபோதும், அது அவரை மனச்சோர்வடையச் செய்யவிடவில்லை. 

மாறாக, அவர் இன்னும் கடினமாக உழைத்தார். அவர் ஜிம்மில் நேரம் செலவிட்டார். தனது உடற்தகுதியில் கவனம் செலுத்தினார், மேலும் ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் கடுமையாகப் பயிற்சி செய்தார். என்ன குறை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதைச் சரிசெய்தார்” என்றார். 

மேலும் படிக்க | டிராவில் முடிந்த தொடர்… இங்கிலாந்துக்கு கோப்பையை கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம்!

மேலும் படிக்க | இந்தியா – இங்கிலாந்து தொடர்: அதிக ரன், விக்கெட் எடுத்த வீரர்கள் யார் யார்?

மேலும் படிக்க | ஆபாச பட தளத்தில் Ex ஆர்சிபி வீரர்… ‘யோவ் மில்ட்ரி நீ எங்க இங்க…’ ரசிகர்கள் ஷாக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.