BCCI : இந்திய அணியின் தூண்களாகக் கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஒருநாள் போட்டிகளிலிருந்து விரைவில் ஓய்வு பெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் 2027 உலகக் கோப்பை வரை விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் அதற்கு முன்பாகவே ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்குப் பிறகு அவர்களின் ஒருநாள் சர்வதேசப் போட்டி வாழ்க்கை முடிவடையக்கூடும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், இந்த நட்சத்திர வீரர்களின் எதிர்காலம் குறித்து பல யூகங்கள் எழுந்துள்ளன. பி.சி.சி.ஐ-யின் புதிய நிபந்தனை காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு இருவரும் உடனடியாக ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக ‘டெய்னிக் ஜாக்ரன்’ என்ற நாளிதழ் தெரிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இந்திய அணியின் வெள்ளைப்பந்து ஆட்டங்களில் கோலோச்சினர். 2027 உலகக் கோப்பையுடன் இருவரும் தங்கள் ஒருநாள் பயணத்தை முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், அவர்களின் ஒருநாள் பயணத்தின் முடிவாக இருக்கலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கையின்படி, 2027 உலகக் கோப்பை வரை இருவரும் விளையாட விரும்பினால், அவர்கள் உள்நாட்டுப் போட்டிகளான விஜய் ஹசாரே டிராபியில் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிகிறது. உலகக் கோப்பைக்குத் தகுதியான வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் முழு தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால், தேர்வாளர்கள் இந்த நிபந்தனையை விதித்துள்ளனர்.
இந்த உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது குறித்த நிபந்தனை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு இருவரும் ஓய்வு பெறுவதற்கு ஒரு காரணமாக அமையலாம். தேர்வாளர்கள் தற்போது இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், 2027 உலகக் கோப்பைக்கான அணியை இப்போதிலிருந்தே உருவாக்க திட்டமிடுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரும் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் ஒருநாள் தொடர் அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து அடிலெய்டு மற்றும் சிட்னியில் போட்டிகள் நடைபெறும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இருபிளேயர்களும் விளையாடுவார்களா? என்ற சந்தேகம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
மேலும் படிங்க: இந்த 3 வீரர்களுக்கு இனி டெஸ்ட் அணியில் வாய்ப்பு இல்லை! பிசிசிஐ அதிரடி!
மேலும் படிங்க: பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம்.. சின்னசாமி ஸ்டேடியத்திற்கு குட்-பை.. கர்நாடக அரசு அதிரடி!