இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவர்களது எதிர்காலம் குறித்த கேள்விகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தற்போதைக்கு, தங்களது உடனடி கவனம் வரவிருக்கும் ஆசிய கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை மீதுதான் உள்ளது என்றும், 2027 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலக கோப்பை குறித்து முடிவெடுக்க எந்த அவசரமும் இல்லை என்றும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் படிங்க: இந்த 3 வீரர்களுக்கு இனி டெஸ்ட் அணியில் வாய்ப்பு இல்லை! பிசிசிஐ அதிரடி!
வதந்திகளின் பின்னணி
விராட் கோலியும், ரோஹித்தும் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்களது ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்தன. அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன் இருவரும் ஓய்வு பெறலாம் அல்லது 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் திட்டங்களில் அவர்கள் இல்லை என சில தகவல்கள் வெளியாகின. மேலும், அவர்கள் தொடர்ந்து அணியில் நீடிக்க விரும்பினால், டிசம்பர் மாதம் தொடங்கும் விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.
பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு
இந்நிலையில் இந்த ஊகங்கள் அனைத்தையும் மறுத்துள்ள பிசிசிஐ வட்டாரங்கள், கோலி மற்றும் ரோஹித்தின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ எந்த அவசர முடிவையும் எடுக்காது என்று கூறியுள்ளன. பிசிசிஐ-யின் தற்போதைய முக்கிய நோக்கம், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 தொடருக்கு சிறந்த அணியை தேர்ந்தெடுப்பதும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளுமே ஆகும். ஓய்வு குறித்து கோலி மற்றும் ரோஹித் மனதில் ஏதேனும் திட்டம் இருந்தால், அவர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு செய்தது போலவே, தாங்களாகவே முன்வந்து பிசிசிஐ-யிடம் தெரிவிப்பார்கள் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விராட் மற்றும் ரோஹித் ஓய்வு குறித்து எந்த விவாதமும் இதுவரை நடைபெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வயது ஒரு முக்கிய காரணம்?
இந்த விவாதங்களுக்கு முக்கிய காரணம் வயதுதான். 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையின் போது, விராட் கோலிக்கு 39 வயதும், ரோஹித் சர்மாவுக்கு 40 வயதும் ஆகியிருக்கும். எனவே, இவ்வளவு நீண்ட காலத்திற்கு அவர்களால் அணியில் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், இருவரும் கடைசியாக விளையாடிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். தற்போதைக்கு, இருவரும் ஓய்வில் இருந்து திரும்பி, பயிற்சியை தொடங்கியுள்ளனர். கோலி லண்டனிலும், ரோஹித் மும்பையிலும் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, வதந்திகளை பொருட்படுத்தாமல், வரவிருக்கும் போட்டிகளில் அவர்களின் ஆட்டத்தை பொறுத்தே எதிர்காலம் குறித்த தெளிவான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம்.. சின்னசாமி ஸ்டேடியத்திற்கு குட்-பை.. கர்நாடக அரசு அதிரடி!