மும்பை,
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறிப்பிட்ட 3 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடினார். பணிச்சுமையை காரணம் காட்டி 2 டெஸ்டில் ஒதுங்கிக் கொண்டார். இதில் அவர் விளையாடாத அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. அவர் விளையாடிய போட்டிகளில் 2-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டது. இதனால் அவரை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். அதோடு பும்ரா தனது விருப்பத்திற்கு ஏற்ப போட்டிகளை தேர்வு செய்து விளையாடக்கூடாது என்று பல முன்னாள் வீரர்களும் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தாம் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான முகேஷ் அம்பானியிடம் பேசி ஐ.பி.எல். தொடரில் பும்ராவுக்கு ஓய்வு வாங்கி கொடுத்திருப்பேன் என்று இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முக்கியத்துவத்தையும் அவரது பலவீனமான முதுகுவலியையும் கருத்தில் கொண்டு, பும்ராவை தேர்வாளர்கள் மற்றும் பி.சி.சி.ஐ., ஐபிஎல்-2025 ஐ தவறவிடுமாறு கூறியிருக்க வேண்டும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்கு நாம் முழுமையான உடற்தகுதி பெற்ற பும்ராவை வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
ஒருவேளை நான் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் முகேஷ் அம்பானியிடம் (மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்) இந்தியாவுக்காக ஜஸ்பிரித் பும்ரா, ஐ.பி.எல். தொடரை தவற விடுவது எவ்வளவு முக்கியமானது என்பதை பேசி புரிய வைத்திருப்பேன். அல்லது ஜஸ்பிரித் பும்ரா குறைந்த ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும் என்று அம்பானியிடம் கேட்டுக் கொண்டிருப்பேன். அவர்கள் அவ்வாறு செய்ய ஒப்புக்கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஐ.பி.எல்.-ல் எடுக்கும் ரன்களையும் விக்கெட்டுகளையும் யார் நினைவில் வைத்திருப்பார்கள்? . இந்த இங்கிலாந்து தொடரில் முகமது சிராஜின் அபாரமான ஆட்டம், சுப்மன் கில், கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோரின் அற்புதமான பேட்டிங், வாஷிங்டன் சுந்தரின் அற்புதமான ஆல் ரவுண்ட் ஆட்டம் ஆகியவற்றை மக்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.
கிட்டத்தட்ட அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாடி இருந்தால் நாம் தொடரை வென்றிருக்க முடியும். சில நேரங்களில் போட்டிகளைத் தவறவிட்டதற்கு பும்ராவை நீங்கள் குறை சொல்ல முடியாது. பும்ரா முதுகு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவரது முதுகு பலவீனமாக உள்ளது. நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பை நீங்கள் கேள்வி கேட்க முடியாது. அவர் இந்தியாவுக்காக விளையாடிய போதெல்லாம் தனது அனைத்தையும் கொடுத்துள்ளார். போதுமான ஓய்வுக்குப் பிறகு, முழுமையாக உடல் தகுதி பெற்று அவர் இந்தியாவுக்காகத் திரும்புவார் என்று நம்புகிறேன்” என கூறினார்.