மும்பை,
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்‘ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து ‘ஆண்டர்சன்- தெண்டுல்கர்’ கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடருக்கு முன் சர்வதேச டெஸ்டில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றனர். இதனால் இந்தியா இந்த தொடரில் படுதோல்வி அடையும் என்பதே பலரது கணிப்பாக இருந்தது. ஆனால் அவர்களின் கணிப்பை எல்லாம் பொய்யாக்கிய சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நெருப்பாக செயல்பட்டு தொடரை சமன் செய்து அசத்தியது.
இருப்பினும் அந்த தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 3-வது இடத்தில் களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் அசத்தவில்லை. சொல்லப்போனால் விராட் கோலி இறங்கிய 4-வது வரிசையில் பேட்டிங் செய்த சுப்மன் கில் அவரது இடத்தை நிரப்பும் அளவுக்கு சிறப்பாக அசத்திவிட்டார். ஆனால் 3-வது இடத்திற்கு மட்டும் இன்னும் சரியான மாற்றுவீரர் கிடைக்கவில்லை. கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இருவரை மாற்றி மாற்றி இறக்கியும் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. கடைசியாக அந்த இடத்தில் (3-வது வரிசை) புஜாரா அசத்தலாக விளையாடினார்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் 3-வது பேட்டிங் வரிசையில் அபிமன்யு ஈஸ்வரனை இறக்கலாம் என முன்னாள் கேப்டன் கங்குலி யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “அவருக்கு (அபிமன்யு ஈஸ்வரன்) வயது (29) அதிகம்தான். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த தொடரில் ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கில், ரிஷப் பண்ட், ஜடேஜா போன்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். ஆனால் 3-வது வரிசையில் வெற்றிடம் இருக்கிறது. ஈஸ்வரனை அங்கே களமிறக்கலாம்” என்று கூறினார்.