தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் உள்ளார். ராகுல் டிராவிட்டின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவரது பயிற்சியில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் சிறப்பாக விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சற்று தடுமாற்றம் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அடுத்த பயிற்சியாளர் குறித்தெல்லாம் பேச்சு அடிப்பட்டது. ஆனால் இங்கிலாந்து தொடரை சமன் செய்த நிலையிலேயே, விமர்சனங்கள் நின்றன. தற்போது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய அணியை ஆசிய கோப்பைக்கு தயார்படுத்தி வருகிறார். இந்த நிலையில், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கு யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்பது குறித்து சத்தீஸ்வர் புஜாரா பேசி உள்ளார்.
அவர் முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வினை கூறி உள்ளார். இது தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசினார். அதில், அவரிடம் அடுத்த இந்திய அணியின் பயிற்சியாளர் யாராக இருப்பார் என கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல், ரவிச்சந்திரன் அஸ்வின் என பதில் அளித்தார். ஒரு பயிற்சியாளருக்கு கிரிக்கெட்டில் ஆழமான அறிவு, ஆட்டத்தின் நுணுக்கங்களை புரிந்துகொள்ளும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவு செய்வது உள்ளிட்டவைகள் தேவை. அஸ்வினிடம் இவை அனைத்துமே உள்ளது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுலுமே அஸ்வினுக்கு நல்ல அனுபவம் உள்ளது. அதேபோல் தோனி போல் ஒரு சிறந்த கேப்டனுக்கு கீழ் விளையாடிய அனுபவமும் அவரிடம் உள்ளது. இதெல்லாம் இந்திய அணிக்கு கைக்கொடுக்கும் என புஜாரா கூறி உள்ளார்.
புஜாரா கூறியதுபோல, அஸ்வினிடம் ஆழ்ந்த கிரிக்கெட் அறிவு உண்டு என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். எதிரணி வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து செயல்படக்கூடியவர். அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கிரிக்கெட் குறித்து தனது பார்வைகளையும் நுணுக்கங்களையும் பகிர்ந்து வருகிறார். தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் இந்திய அணிக்காக 106 டெஸ்ட், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட்டில் 537, ஒடிஐயில் 156 மற்றும் டி20யில் 72 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji