ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதங்களை கிளப்பி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் 2025 தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அதே சமயம் மோசமாக விளையாடிய சில வீரர்களுக்கு வாய்க்கு வழங்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களை தாண்டி சில முன்னாள் வீரர்களிடையும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த இருவர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஒருவர் உட்பட சில வீரர்கள், சமீபத்திய போட்டிகளில் பார்மில் இல்லாத நிலையிலும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ரிங்கு சிங்: கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் சிறப்பான ஃபினிஷராக வலம் வந்த ரிங்கு சிங், ஐபிஎல் 2025 தொடரில் பெரிய ரன்கள் அடிக்க தடுமாறினார். அணியை நல்ல ஒரு முடிவுக்கு கொண்டு செல்ல அவருக்கு பல போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தும் அதனை தவறவிட்டார். இருப்பினும், அவரது முந்தைய சர்வதேச போட்டிகளின் அனுபவத்தையும், டெத் ஓவர்களில் போட்டியை முடித்து கொடுக்கும் திறனையும் கருத்தில் கொண்டு, அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. “ரிங்கு சிங் போன்ற ஒரு வீரர் தேவைப்பட்டதால் தான், வாஷிங்டன் சுந்தர் போன்ற ஃபார்மில் உள்ள வீரரை எங்களால் எடுக்க முடியவில்லை,” என்று தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.
ஹர்ஷித் ராணா: டெல்லியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவுக்கும் இந்த ஐபிஎல் சீசன் ஒரு மோசமான சீசனாகவே இருந்தது. இருப்பினும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “ஹர்ஷித் ராணாவின் திறமைகள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் கடந்த காலங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்,” என்று கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்:
திலக் வர்மா: இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு வீரரான திலக வர்மா, ஐபிஎல் 2025 தொடரில் மிகவும் மோசமான ஃபார்மில் இருந்தார். கிடைத்த நல்ல ஆட்டங்களை பெரிய ஸ்கோர்களாக மாற்ற தவறினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பின்னடைவுக்கு இவரது பார்மும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இருப்பினும், இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணியில் எடுக்கப்படாத வீரர்கள்
இவர்களை தவிர, சில வீரர்கள் தேர்வு செய்யப்படாமல் போனதும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. உதாரணமாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (559 ரன்கள்), ஷ்ரேயாஸ் ஐயர் (604 ரன்கள்) போன்ற வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை. அதே சமயம் சுப்மான் கில் போன்ற வீரர்கள் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு குழுவின் சர்ச்சை
இந்த 15 பேர் கொண்ட அணியில் சில வீரர்கள் இடம் பெற்று இருப்பது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இருப்பினும் தேர்வுக்குழு ஐபிஎல் ஃபார்மை மட்டும் கருத்தில் கொள்ளாமல், வீரர்களின் கடந்த கால சர்வதேச அனுபவம், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் போட்டியை மாற்றும் திறன் மற்றும் அணிக்கு தேவையான சமநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அணியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆசிய கோப்பை தொடர், அடுத்த ஆண்டு வரவிருக்கும் டி20 உலக கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. இதில் சிறப்பாகா விளையாடும் வீரர்கள் உலக கோப்பை அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு வாய்ப்பளித்துவிட்டு, சிறப்பாக விளையாடிய வீரர்களை புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது.
About the Author
RK Spark