இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தன்னை தேர்வுக்குழு தேர்வு செய்ய விருப்பம் காட்டாத காரணத்தினாலேயே அவர் ஓய்வை அறிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த மே மாதம் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தர். தற்போது அவர் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே நீட்டித்து வருகிறார். அவர் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாட திட்டம் வைத்துள்ளார். ஆனால் அவரால், 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை ஃபார்மில் இருக்க முடியுமா என்ற சந்தேகம் உள்ளது.
தற்போது ரோகித் சர்மாவுக்கு 38 வயதாகி உள்ளது. அப்படி இருக்கையில் 2027 உலக கோப்பையின்போது, அவருக்கு 40 வயது ஆகிவிடும். இதனால் அவர் அணியில் இடம் பிடிப்பது கடினம் தான் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர். இதற்கிடையில், ரோகித் சர்மாவுக்கு பின்னர் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், ரோகித் சர்மாவுக்கு பிறகு ஸ்ரேயாஸ் ஐயரை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ஸ்ரேயாஸ் ஐயர் அவருடைய அசாதாரண அமைதியால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சாம்பியனாக மாற்றினார். அதன்பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியையும் வழிநடத்தி இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். அவர் ஒரு அசாதாரண கேப்டன். அவர் விரைவில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என அம்பத்தி ராயுடு கூறினார்.
ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் போட்டிகளில் இதுவரை சிறப்பான பேட்டிங் செயல்திறனையே வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2845 ரன்கள் அடுத்து 48.22 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். இதில், 5 சதம் மற்றும் 22 அரை சதங்களும் அடங்கும். அம்பத்தி ராயுடு சொன்னதுபோல ஐபிஎல் தொடரில் அவரது கேப்டன்சியை அவர் நிருபித்துள்ளார். முதலில் டெல்லி அணியை வழிநடத்திய போது, அந்த அணியை இறுதி போட்டி வரை அழைத்து வந்தார். பின்னர், கேகேஆர் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். இதையடுத்து 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தி இறுதி போட்டி வரை அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji