லாகூர்,
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் கைபர் பக்துவா, சிந்து, பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், பல பகுதிகளில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.
கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கனமழை, வெள்ளத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 750 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கனமழை , வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அதேவேளை, கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.