புதுடெல்லி,
துணை ஜனாதிபதி பதவியில் இருந்து கடந்த மாதம் ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர், அதற்குப்பின் பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் எங்கே? என மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்த இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘முன்னாள் துணை ஜனாதிபதி எங்கே சென்றிருக்கிறார்? ஏன் அவர் ஒளிந்து இருக்கிறார்?’ என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், ‘அவரது பதவி விலகலில் மிகப்பெரும் மர்மம் உள்ளது. அதைப்போல தற்போது அவர் ஏன் தலைமறைவாக இருக்கிறார் என்பது பற்றியும் ஒரு கதை உள்ளது. இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறார், மறைக்க வேண்டியிருக்கிறது? அது அனைவருக்கும் தெரியும்’ என்றும் தெரிவித்தார்.பின்னர் தனது எக்ஸ் தளத்தில், ‘இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறார்? அவரால் ஏன் வெளியே வந்து ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது? யோசித்துப் பாருங்கள், நாம் எப்படிப்பட்ட காலத்தில் வாழ்கிறோம்’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.