சென்னை,
மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு தடகளம் சங்கம் சார்பில் எஸ்.டி.ஏ.டி. ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அடுத்த மாதம் டோக்கியோவில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப்புக்கான அணித் தேர்வு போட்டியாகவும் இது அமைந்திருப்பதால் இதில் வீரர், வீராங்கனைகளின் செயல்பாடு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
முதல் நாளான நேற்று தமிழக வீரர், வீராங்கனைகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். 100 மீட்டர் ஓட்டத்தில் இருபாலரிலும் தமிழகம் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதி சுற்றில் இலக்கை நோக்கி 8 வீராங்கனைகள் சீறிப்பாய்ந்தனர். இதில் மின்னல் வேகத்தில் ஓடிய திருச்சியை சேர்ந்த 26 வயதான தனலட்சுமி 11.36 வினாடிகளில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். மற்றொரு தமிழக வீராங்கனையான நெல்லையைச் சேர்ந்த அபிநயா வெள்ளிப்பதக்கமும் (11.58 வினாடி), கர்நாடகாவின் சினேகா (11.61 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் கோவைச் சேர்ந்த தமிழரசு 10.22 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அத்துடன் முந்தைய போட்டி சாதனையையும் (2021-ம் ஆண்டில் பஞ்சாப்பின் குரிந்தர் சிங் 10.27 வினாடி) முறியடித்தார். கர்நாடகாவின் மணிகண்டா 2-வது இடத்தையும் (10.35 வினாடி), தமிழகத்தின் ராகுல் குமார் 3-வது இடத்தையும் (10.40 வினாடி) பிடித்தனர்.