சென்னை,
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் நாடு முழுவதும் இருந்து 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தமிழகம் 7 பதக்கங்களை குவித்தது.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் எதிர்பார்த்தது போலவே தமிழக வீரர் டி.கே. விஷால் தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கினார். அவர் இலக்கை 45.12 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.
இதற்கு முன்பு 2019-ம் ஆண்டில் முகமது அனாஸ் 45.21 வினாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. அந்த 6 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். குறுகிய காலத்தில் 400 மீட்டர் ஓட்டத்தில் நாட்டின் ‘நம்பர் ஒன்’ வீரராக உருவெடுத்துள்ள 21 வயதான விஷால் திருப்பத்தூரை சேர்ந்தவர் ஆவார். இந்த சாதனை வெற்றியை பயிற்சியாளர் ஜேசன் டாவ்சனுக்கு அர்ப்பணித்தார்.
ஆண்களுக்கான கம்பூன்றி தாண்டுதலில் (போல்வால்ட்) மூன்று பதக்கத்தையும் தமிழகம் முழுமையாக கபளீகரம் செய்த நிலையில் பெண்கள் பிரிவிலும் தமிழகத்துக்கே மகுடம் கிடைத்தது. மயிலாடுதுறையை சேர்ந்த பரனிகா இளங்கோவன் 4.10 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தை பிடித்தார். கேரளாவின் மரியா ஜெய்சன் வெள்ளிப்பதக்கமும் (4.05 மீ), மற்றொரு தமிழக வீராங்கனை சத்யா வெண்கலப்பதக்கமும் (4.00 மீ) பெற்றனர்.
ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் டாப்-2 இடங்களை உத்தரபிரதேச வீரர்கள் பிடித்தனர். அந்த வகையில் யூனுஸ் ஷா (3 நிமிடம் 41.22 வினாடி), அஜய் சரோஜ் (3 நிமிடம் 41.55 வினாடி) ஆகியோரது கழுத்தை முறையே தங்கம், வெள்ளிப்பதக்கம் அலங்கரித்தன.