புதுடெல்லி,
டெல்லியில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு கடந்த 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மற்றொரு அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 14-ந் தேதி ஒத்திவைத்தது.
இதற்கிடையே, தெருநாய்களை பிடிப்பது தொடர்பாக டெல்லி மாநகராட்சி ஒரு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில், அறிவிப்பாணை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ஜேகே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நேற்று மனுதாரரின் வக்கீல் ஆஜரானார். தங்கள் மனுவை அவசர விசாரணைக்கு பட்டியலிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அவசர விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.