மதுரை: நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது கருணை காட்ட முடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, மக்கள் நலனுக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு கருணை காட்ட முடியாது. அதே நேரத்தில், நீர்நிலைப் பகுதி ஆக்கிரமிப்பாளர்கள், அந்த இடத்தில் பல ஆண்டுகளாக வாழ்வதாகத் தெரிகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி, அவர்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும்” என்றனர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான் வாதிடும்போது, “நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. அதில் தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறைகளை முடிக்க 6 மாதங்கள் தேவைப்படுகிறது” என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள், “நீர்நிலைகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்ட பிறகு ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு, மக்களின் நலனுக்காக நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.