பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று உடல்களை நேத்ராவதி ஆற்றங்கரை உள்பட பல்வேறு இடங்களில் புதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புகார் தெரிவித்த நபருக்கு ஆதரவாக வக்கீல் மஞ்சுநாத் என்பவர் ஆஜராகி உள்ளார். மேலும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் புகார்தாரர், எஸ்.ஐ.டி. போலீசாரிடம் அடையாளம் காட்டிய இடங்களில் புதைக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை பற்றியும் தகவல்களை வெளியிட்டார்.
ஆனால் அவர் கூறியதுபோல் எந்த உடல்களும் எஸ்.ஐ.டி. போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து வக்கீல் மஞ்சுநாத் பொய்யான தகவல்களை வெளியிட்டு தர்மஸ்தலா வழிபாட்டு தலத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக தர்மஸ்தலாவை சேர்ந்த ரகுராம் ஷெட்டி பெல்தங்கடி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் வக்கீல் மஞ்சுநாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. புகார் அளித்த சின்னையா என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். சிலருடைய அழுத்தத்தின் பேரில் அவர் பொய் புகார் அளித்திருக்கிறார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
அவருடைய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தர்மஸ்தலா விவகாரத்தில் புகார்தாரர் கைது செய்யப்பட்டது குறித்து பெங்களூருவில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த ஆர். அசோக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, தர்மஸ்தலா விவகாரத்தில் புகார்தாரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். தர்மஸ்தலா வழக்கு ஒரு சதிச்செயல் என்று நான் முதலில் இருந்தே கூறி வந்தேன்.
ஆனால் இந்த விவகாரத்தில் அரசு அவசரமாக முடிவு எடுத்துவிட்டது. புகார் கொடுத்தவர் குறித்தும், அவர் அளித்த புகார் குறித்தும் முழுமையாக விசாரிக்காமல் முதல்-மந்திரி சித்தராமையா தன்னுடன் இருப்பவர்களின் பேச்சைக்கேட்டு அவசர, அவசரமாக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிட்டார். எஸ்.ஐ.டி. விசாரணையில் இவை அனைத்தும் பொய் புகார் என்று உறுதியாகி உள்ளது.
முதல்-மந்திரி சித்தராமையா தனது பொது அறிவை பயன்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தால் தர்மஸ்தலா பக்தர்கள் மனவேதனை அடைந்தனர். புகார்தாரரை முழுமையாக விசாரித்து இருந்தால் இன்று இவ்வளவு தூரம் இந்த வழக்கு வந்திருக்காது.
அனன்யா பட் வழக்கும் பொய் என நிரூபணம் ஆகி உள்ளது. அனைவரும் பணம் பெற்று கொண்டு பொய் புகாரை கூறி வருகிறார்கள். புகார்தாரரின் பின்னால் இருப்பவர் சமீர் தான். அவர் தான் இந்த வழக்கில் சூத்திரதாரர். இந்த வழக்கு ஓட்டுக்காக காங்கிரஸ் நடத்திய சதிச்செயல் ஆகும். இல்லையேல் சமீர் எதற்காக இந்த வழக்கில் நுழைய வேண்டும் என அவர் கூறினார்.
அதனால், இதுபற்றி மற்றொரு எஸ்.ஐ.டி. குழுவை அமைக்க வேண்டும். இதில் வெளிநாட்டில் இருந்து சதி திட்டக்காரர்களுக்கு நிதி வந்திருக்கும் சாத்தியம் உள்ளது. இதற்கு பின்னால் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதேபோன்று முன்னாள் முதல்-மந்திரி மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பசவராஜ் பொம்மை, இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளார்.