குருகிராம்,
நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தூய்மையான நகரங்கள் ஆண்டுதோறும் கணக்கெடுப்பின்படி தேர்வு செய்யப்படுகிறது.
ஸ்வச் சர்வேக்சன் எனப்படும் தூய்மையை கணக்கெடுக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் நகரங்களுக்கு வரிசைப்படி விருதுகள் வழங்கப்படும். தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்குவார்.
இதன்படி, நடப்பு ஆண்டில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. 8-வது முறையாக தொடர்ந்து முதல் இடம் பிடித்து இந்த பெருமையை தக்க வைத்து கொண்டது. 2-வது இடம் சூரத்திற்கும், 3-வது இடம் நவி மும்பைக்கும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அரியானாவில் குருகிராம் நகரில் லஜார் என்ற இடத்தில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. இதில், சாலைகளில் இருந்த குப்பைகளை அள்ளி பிளாஸ்டிக் பைகளில் போட்டு அந்த பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.
இந்த பணியில், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து வெளிநாடுகளை சேர்ந்த ஆண், பெண் என இளைஞர்கள் குழுவினர் ஒன்றும் ஆர்வத்துடன் தூய்மைப்படுத்தும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.
அவர்களில் செர்பியா, பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். தெருவோரம், சாலைகளில், நெடுஞ்சாலைகளில் மற்றும் சாக்கடைகளில் இருந்த குப்பைகளையும் அவர்கள் அகற்றினர். இது என்னுடைய குருகிராம். என்னுடைய பெருமை. என்னுடைய பொறுப்பு என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி விழிப்புணர்வையும் அவர்கள் ஏற்படுத்தினர்.
இதுபற்றி செர்பியா நாட்டை சேர்ந்த ஒருவர் கூறும்போது, இந்த நிலம் அழகானது. இந்தியா ஆச்சரியம் ஏற்படுத்த கூடிய நாடு. வீட்டுக்கு வெளியே உள்ள விசயங்களை பற்றியும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. பூமியில் தூய்மையானவர்களாக இந்தியர்கள் உள்ளனர். ஆனால், வீட்டுக்கு வெளியே என வரும்போது, அது தங்களுடைய விசயம் இல்லை என இருந்து விடுகின்றனர். நாம் இதனை மாற்ற வேண்டும். 10 நாட்களுக்கு முன்பே இந்த திட்டம் துவங்கப்பட்டது.
அதற்கு முன்பு தமிழகம், பெங்களூரு மற்றும் ரிஷிகேஷ் என இந்தியா முழுவதும் சிறு சிறு தூய்மை பணிகளை மேற்கொண்டு வந்தோம் என கூறியுள்ளார்.