இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி, தனது கிரிக்கெட் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். இந்தியாவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த கங்குலி தற்போது வெளிநாட்டு தொடர்களிலும் தனது கால்தடத்தை பதிக்க உள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் SA20 டி20 லீக் தொடரில், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கங்குலியின் முழுநேர பயிற்சியாளர் பயணத்தின் தொடக்கமாக அமைவதோடு, SA20 லீக் வரலாற்றில் ஒரு இந்தியர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.
பயிற்சியாளர் கங்குலி
இந்திய கிரிக்கெட்டில் ஒரு ஆக்ரோஷமான கேப்டனாக வலம் வந்து, அணியின் முகத்தையே மாற்றியமைத்த பெருமைக்குரியவர் கங்குலி தான். 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் பெரும்பாலும் பிசிசிஐ தொடர்பான நிர்வாக பொறுப்புகளிலேயே கவனம் செலுத்தி வந்தார். பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும், பின்னர் 2019 முதல் 2022 வரை பிசிசிஐ தலைவராகவும் பணியாற்றியுள்ளார் கங்குலி. கடந்த ஆண்டு, பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தாய் நிறுவனமான JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் கிரிக்கெட் இயக்குநராக கங்குலி நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனம், ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக் தொடர்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இணை உரிமையாளராகவும் உள்ளது. 2019-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தாலும், ஒரு முழுநேர தலைமை பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.
பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி
பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி, இதுவரை SA20 தொடரில் ஒரு கலவையான முடிவுகளையே சந்தித்துள்ளது. முதல் சீசனில், லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து, இறுதி போட்டி வரை முன்னேறியது. ஆனால், இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியிடம் தோல்வியை தழுவியது. அதன்பிறகு, 2023-24 மற்றும் 2024-25 ஆகிய இரண்டு சீசன்களிலும், அந்த அணி ஐந்தாவது இடத்தையே பிடித்து, ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற தவறியது.
இந்த சூழலில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜொனாதன் டிராட்டுக்கு பதிலாக, கங்குலி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கங்குலியின் அனுபவம், புதிய அணுகுமுறை மற்றும் மனப்பான்மை அணியின் தலையெழுத்தை மாற்றி, இந்த முறை கோப்பையை வெல்லும் என்ற பெரும் நம்பிக்கையை அணி நிர்வாகத்திற்கு அளித்துள்ளது. மேலும், தென்னாப்பிரிக்காவின் மற்றொரு ஜாம்பவான் பந்துவீச்சாளரான ஷான் பொல்லாக், உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார், இது அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.
கங்குலியின் முதல் பணி
டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவிருக்கும் SA20 தொடரின் நான்காவது சீசனுக்கான வீரர்கள் ஏலம், வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. கங்குலியின் தலைமையின் கீழ், இந்த ஏலத்தில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து, ஒரு வலுவான அணியை கட்டமைப்பதே அவரது முதல் மற்றும் முக்கிய பணியாக இருக்கும். கங்குலியின் இந்த புதிய அவதாரம், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், சர்வதேச கிரிக்கெட் வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கேப்டனாக இந்திய அணிக்கு புதிய பாதையைக் காட்டிய ‘தாதா’, பயிற்சியாளராகவும் தனது முத்திரையை பதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark