இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் ராகுல் டிராவிட் நீண்ட நாட்கள் நிலைத்து இருந்தார். அவருக்கு பிறகு அந்த இடத்தை சட்டேஸ்வர் புஜாரா சிறப்பாக கையாண்டார். அவரின் பேட்டிங் அணுகுமுறை, இந்திய அணிக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல சரித்திர வெற்றிகளை தேடி தந்துள்ளது. 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள் உட்பட 7195 ரன்கள் அடித்துள்ளார் புஜாரா. இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த புஜாரா,சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார்.
புஜாரா, அஸ்வின், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மெல்ல மெல்ல ஓய்வை அறிவித்து வரும் இந்த சூழலில், இந்திய அணி ஒரு மாற்று காலத்திற்குள் நுழைகிறது. இந்த நிலையில், புஜாராவின் இடத்தை நிரப்பி நம்பர் 3 வரிசையில் அதே போன்ற ஒரு ஸ்திரத்தன்மையையும், நம்பிக்கையையும் அளிக்கக்கூடிய வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த இடத்திற்கு பொருத்தமானவராக கருதப்படும் மூன்று இளம் வீரர்கள் பற்றி பார்ப்போம்.
அபிமன்யு ஈஸ்வரன்
இந்தியாவின் நம்பகமான டெஸ்ட் வீரராக கருதப்படும் அபிமன்யு ஈஸ்வரன், சட்டேஸ்வர் புஜாராவின் இடத்திற்கு பொருத்தமானவராகப் பார்க்கப்படுகிறார். உள்நாட்டு கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் இவர், ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 29 வயதான அபிமன்யு ஈஸ்வரன், இதுவரை 100-க்கும் மேற்பட்ட முதல் தர போட்டிகளில் விளையாடி, 48.70 என்ற சராசரியுடன் 7800-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். இதில் 27 சதங்களும் அடங்கும். இந்திய ஏ அணியை பலமுறை வழிநடத்தியுள்ள இவர், தனது தலைமை பண்புகளையும் நிரூபித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான இந்திய டெஸ்ட் அணியில் இவர் இடம்பெற்றிருந்தாலும், இன்னும் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். வரவிருக்கும் துலீப் டிராபி தொடரில், கிழக்கு மண்டல அணிக்கு இவர் தலைமை தாங்க உள்ளார். நம்பர் 3 வரிசையில் இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாபா இந்திரஜித்
தமிழ்நாட்டை சேர்ந்த பாபா இந்திரஜித், இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் நம்பகமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். சட்டேஸ்வர் புஜாராவின் இடத்திற்கு மற்றொரு வலுவான போட்டியாளராக இவர் கருதப்படுகிறார். வலது கை பேட்ஸ்மேனான இவர், விக்கெட் கீப்பிங் மற்றும் லெக்-ஸ்பின் பந்துவீச்சு என பன்முகத் திறமைகளை கொண்டவர். 2014 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு அணியின் மிடில்-ஆர்டரில் ஒரு முக்கிய வீரராக இருந்து வருகிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியை சென்னையில் விளையாடியுள்ளதால், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் இவர் ஒரு தலைசிறந்த வீரராக கருதப்படுகிறார்.
இதுவரை 83 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 51.84 என்ற சராசரியுடன் 5,599 ரன்களை குவித்துள்ளார். இதில் 16 சதம், 29 அரைசதங்களும் அடங்கும். 2017-18 துலீப் டிராபி தொடரில் தனது அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடித்தது மற்றும் மும்பைக்கு எதிராக 152 ரன்கள் எடுத்தது ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க ஆட்டங்களாகும்.
சர்ஃபராஸ் கான்
மும்பையை சேர்ந்த சர்ஃபராஸ் கான், இந்தியாவின் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவராக நீண்ட காலமாகவே கருதப்படுகிறார். சட்டேஸ்வர் புஜாராவின் ஓய்வுக்கு பிறகு, அந்த இடத்தை பிடிப்பதற்கான ஒரு வலுவான போட்டியாளராக அவர் உருவெடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் சுமார் 66 என்ற பிரம்மிக்க வைக்கும் சராசரியுடன், 4,600-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இதில் 16 சதங்களும் அடங்கும். இவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்திற்கு கிடைத்த பரிசாக, 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 150 ரன்கள் குவித்து, தனது திறமையை சர்வதேச அரங்கிலும் நிரூபித்தார். சமீபத்தில், கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தின் மூலம், 17 கிலோவிற்கும் அதிகமாக உடல் எடையை குறைத்து, தனது உடற்தகுதியையும் மேம்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற புச்சி பாபு தொடரில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அணிக்கு எதிராக 138 ரன்கள் குவித்தார். நீண்ட நேரம் களத்தில் நின்று, பந்துவீச்சாளர்களை சோர்வடைய செய்து, பெரிய இன்னிங்ஸ்களை ஆடும் இவரது திறன், புஜாராவின் பாரம்பரியத்தை தொடர்வதற்கு ஒரு சரியான தேர்வாக இருக்கும்.
About the Author
RK Spark