மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை.. ஆனால் அக்கறையுடன்.. – 3 மாதங்களுக்கு பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஆர்சிபி

பெங்களூரு,

அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.

ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்தே ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் 17 ஆண்டுகள் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அந்த அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் இந்த ஐ.பி.எல். சீசனோடு தணிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியினருக்கு கடந்த ஜூன் 4-ம் தேதி சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சோக சம்பவத்துக்கு பிறகு ஏறக்குறைய 3 மாதங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கங்களில் எந்த வித பதிவும் இடாமல் இருந்தது.

இந்நிலையில் சுமார் 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி நிர்வாகம் தனது சமூக வலைதளத்தில் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் ஆர்சிபி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புள்ள 12வது மனிதர் படையே, இது உங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான கடிதம்! கடந்த மூன்று மாதங்களாக இங்கு நாங்கள் பதிவு செய்யவில்லை. மவுனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம். இந்த இடம் ஒரு காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த ஆற்றல், நினைவுகள் மற்றும் தருணங்களால் நிறைந்திருந்தது. ஆனால் ஜூன் 4 எல்லாவற்றையும் மாற்றியது. அந்த நாள் எங்கள் இதயங்களை உடைத்தது, அன்றிலிருந்து அமைதி எங்கள் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் வழியாக இருந்து வருகிறது.

அந்த அமைதியில், நாங்கள் துக்கப்படுகிறோம். கேட்டல், கற்றல். மெதுவாக, வெறும் பதிலை விட வேறு ஒன்றை உருவாக்கத் தொடங்கினோம். நாங்கள் உண்மையிலேயே நம்பும் ஒன்று.

அப்படித்தான் ‘ஆர்.சி.பி கேர்ஸ்’ உருவானது. இது எங்கள் ரசிகர்களுடன் இருக்கவும், கவுரவிக்கவும், குணப்படுத்தவும், அர்த்தமுள்ள செயலுக்காக எங்கள் சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மேடை. நாங்கள் இன்று இந்த இடத்திற்கு மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை, ஆனால் அக்கறையுடன் திரும்புகிறோம். உங்களுடன் பகிர்ந்து கொள்ள, ஒன்றாக நிற்க. ஒன்றாக முன்னேற. கர்நாடகாவின் பெருமையாக தொடர ஆர்.சி.பி கேர்ஸ். எப்போதும் அப்படியே இருக்கும்.

விரைவில் மேலும் விவரங்கள்…” என்று தெரிவித்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.