புதுடெல்லி,
ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வருபவர் சதீஷ் குமார். அவருடைய பதவி காலம் 2025, ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், அவருக்கு ஒரு வருட பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்திய ரெயில்வே துறையில் 1988-ம் ஆண்டு மார்ச்சில் பணியை தொடங்கிய அவர், அத்துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகிறார்.
இதுபற்றி அரசு வெளியிட்ட உத்தரவில், சதீசுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கான ஒப்புதலை நியமனங்கள் குழு வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இவையிரண்டில் எது முதலில் வருமோ அதன்படி அவர், ஒப்பந்த அடிப்படையில், செப்டம்பர் 1-ந்தேதி முதல், மீண்டும் பணியமர்த்தப்படுகிறார் என தெரிவிக்கின்றது.
அவருடைய பதவி காலத்தில், பனி அடர்ந்த சூழலில் ரெயில் சேவையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பனி பாதுகாப்பு உபகரணம் ஒன்றை கண்டுபிடித்து தந்து முக்கிய பங்காற்றியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.