டேராடூன்,
உத்தரகாண்டில் தினமும் மழைப்பொழிவால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்படுகிறது. இதில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரகாண்டில் கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதுபற்றி வெளியான தகவலில், சோன்பிரயாக் மற்றும் கவுரிகுண்ட் பகுதிகளுக்கு இடையே முன்கட்டியா மலைப்பகுதியருகே வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, இன்று காலை 7.34 மணியளவில் பெரிய கற்கள் மற்றும் பாறைகள் உருண்டு இந்த வாகனத்தின் மீது விழுந்தன. இதில், வாகனத்தில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
வாகனத்தில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது. இதனை ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில், காயமடைந்தவர்கள் சோன்பிரயாகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில், உயிரிழந்த 2 பேரும் உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள பர்கோட் பகுதியை சேர்ந்த ரீட்டா (வயது 30) மற்றும் சந்திர சிங் (வயது 68) என அடையாளம் காணப்பட்டனர்.