காந்தி கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா?

சென்னையில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிவரும் காந்தி மகான் (பாலாஜி சக்திவேல்), தன் மனைவி கண்ணம்மாவுடன் (அர்ச்சனா) வசித்து வருகிறார். ஒரு அறுபதாம் கல்யாண நிகழ்வைப் பார்த்தவுடன் கண்ணம்மாவின் மனதிலும் அதே ஆசை எழ, அதைக் காந்தியிடம் சொல்கிறார்.

கண்ணாம்மாவின் ஏக்கத்தைப் பிரமாண்டமாக நிறைவேற்ற முடிவெடுக்கும் காந்தி, அதற்காக விழா ஏற்பாட்டு நிறுவனம் வைத்திருக்கும் கதிரை (கேபிஒய் பாலா) அணுகுகிறார்.

காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review
காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review

பணத்தேவையிலிருக்கும் கதிரும், அவரிடம் கூடுதல் பணத்தைப் பிடுங்க, ரூ.50 லட்சம் செலவாகும் எனப் பொய் கணக்குக் காட்டுகிறார். பல தடைகளைத் தாண்டி பணத்தைப் புரட்டும் முயற்சியில் காந்தியும், அவரிடமிருந்து பணத்தைப் பிடுங்கும் முயற்சியில் கதிரும் களமிறங்குகிறார்கள்.

இறுதியில் திருமணம் நடந்ததா, கதிரின் வாழ்க்கையில் காந்தி ஏற்படுத்தும் தாக்கம் என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில்களைச் சொல்லியிருக்கிறது செரிஃப் இயக்கியிருக்கும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம்.

காதல், ஆக்ஷன், எமோஷன், காமெடி என விரியும் கதிர் கதாபாத்திரத்தில் காமெடிக்கும் மட்டும் பாதி பொருந்தியிருக்கிறார் பாலா. உருவக்கேலிகளைத் தவிருங்களேன் பாலா!

முதுமையில் மனைவியிடம் பெருகும் காதல், மனைவியின் ஏக்கத்தைப் போக்கத் துடிக்கும் வைராக்கியம் எனப் படம் முழுவதும் எமோஷன் கண்ணாடியை மாட்டியிருக்கும் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் பொருந்திப் போனாலும், பல காட்சிகளில் அவரின் நடிப்பு ஓவர் டோஸ்!

காதலனின் அக்கறைக்கு ஏங்கும் காதலியாக, நமீதா கிருஷ்ணமூர்த்தி கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். இறுதிக்காட்சிக்கு அர்ச்சனாவின் நடிப்பு வலுசேர்க்க முயல்கிறது.

காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review
காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review

லாங்க் ஷாட் மற்றும் இரவுநேரக் காட்சிகளால் பலம் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா. துண்டு துண்டாகச் சிதறும் காட்சிகளை நேர்க்கோட்டில் கோர்க்கத் தவறுகிறார் படத்தொகுப்பாளர் சிவானந்தீஸ்வரன்.

விவேக் – மெர்வின் இசை கூட்டணியில், ‘திமிருக்காரி’ பாடல் ஓகே ரகம். விட்டுப்போன எமோஷன்களைத் தன் பின்னணி இசையால் கொண்டுவர முயன்றிருக்கும் இந்த இசைக் கூட்டணி, அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறது.

பணம் பெரிதில்லை; காதலும் காதல் மனைவியுமே முக்கியம் என வாழும் காந்தி, பணமே முக்கியமென ஓடிக்கொண்டிருக்கும் கதிர் என வெவ்வேறு குணங்களையும், புரிதல்களையும் கொண்ட இருவரின் பயணத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் செரிஃப்.

காந்தி தம்பதியின் அறிமுகம், அவர்களின் இளவயது காதல், கண்ணம்மாவின் ஏக்கம், கதிரின் அறிமுகம் என நேரடியாகக் கதைக்குள் நுழைந்தாலும், அதற்கான திரைக்கதை துண்டுதுண்டாக கோவையில்லாமல் மிதப்பதால் கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியவில்லை.

காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review
காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review

கதாபாத்திரங்களும் போதுமான ஆழமும் தெளிவுமில்லாமல் பேசிக்கொண்டே இருப்பது பெரிய மைனஸ்! அதனால், திரைப்படத்தின் மையக்கதை அழுத்தம் பெறாமல், நாமே அதை யூகித்துக்கொள்ளும்படி அமைகிறது.

பாலாவின் அபத்தமான உருவக்கேலிகளுக்கு இடையில், சில ஒன்லைன்கள் மட்டும் ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. இடைவேளை ஓரளவிற்கு ஆறுதலான ட்விஸ்ட்டைத் தருகிறது.

இரண்டாம் பாதியிலும் முதல் பாதியின் பிரச்னைகளே வரிசை கட்டுகின்றன. பணத்தை மாற்றும் முயற்சியில் நடக்கும் காமெடி சம்பவங்களில் சில ஒர்க் அவுட் ஆக, மற்றவை திரை நேரத்தை நீட்டிக்க மட்டுமே உதவுகின்றன.

பின்கதை, முன்கதை என மாறி மாறி பயணிக்கும் திரைக்கதையில், காலவரிசையில் சில இடங்களில் தெளிவில்லை. க்ளைமாக்ஸில் அதீத எமோஷன் காட்சிகள் வரிசைக்கட்டி வந்தாலும், அவற்றை முன்னமே யூகித்துவிட்டபடியால், தேவையான தாக்கத்தைத் தராமல் அவை திரையை மட்டுமே நிறைக்கின்றன.

காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review
காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review

தெளிவில்லாத திரைக்கதை, குழப்பமான கதாபாத்திரங்கள், மேலோட்டமான தொழில்நுட்ப ஆக்கம் போன்ற பல தூசிகளால் குவியமில்லாமல் மங்கலாகவே தெரிகிறது இந்த ‘காந்தி கண்ணாடி’.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.