மும்பை,
மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்மலா என்ற பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஐ.பி.எஸ். அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா, மண் அள்ளும் பணியை தடுத்து நிறுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அப்போது, அங்கிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர், மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவாரை மொபைல் போனில் அழைத்து, ஐ.பி.எஸ். அதிகாரி அஞ்சனா கிருஷ்ணாவிடம் பேசுமாறு மொபைல் போனை கொடுத்தார். போனில் பேசிய அஞ்சனா கிருஷ்ணா, அஜித் பவாரின் குரலை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த அஜித் பவார், “உனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். என்னை பார்க்க வேண்டுமா? உன் மொபைல் எண்ணை கொடு, அல்லது வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்து பார். என் முகத்தை பார்த்தால் நான் யார் என்று தெரியும். என்ன தைரியம் உனக்கு” என்றார். பின்னர் வீடியோ கால் மூலம் பேசி, அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஐ.பி.எஸ். அதிகாரியிடம் அஜித் பவார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இது குறித்து சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். திருடர்களை பாதுகாத்து கொண்டு போலீஸ் அதிகாரியை மிரட்டுவதாக விமர்சித்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து இது குறித்து அஜித் பவார் ‘எக்ஸ்’ தளத்தில் விளக்கமளித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
“சோலாப்பூரில் காவல்துறை அதிகாரியுடனான எனது உரையாடல் தொடர்பாக சில வீடியோக்கள் பரவி வருகின்றன. சட்ட அமலாக்கத்தில் தலையிடுவது எனது நோக்கமல்ல, மாறாக களத்தில் நிலைமை அமைதியாக இருப்பதையும், மேலும் மோசமடையாமல் இருப்பதையும் உறுதி செய்வதே எனது நோக்கம் என்பதை தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
தனித்துவத்துடனும் தைரியத்துடனும் பணியாற்றும் பெண் அதிகாரிகள் உட்பட, நமது காவல்துறை மற்றும் அதன் அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அனைத்திற்கும் மேலாக சட்டத்தின் ஆட்சியை நான் மதிக்கிறேன். வெளிப்படையான நிர்வாகத்திற்கும், மணல் அள்ளுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின்படி கண்டிப்புடன் கையாளப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.