திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விரைவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. அதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருமலையில் பக்தர்களிடம் பிச்சையெடுத்தவர்கள், அனுமதியின்றி வியாபாரம் செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
தொடர்ந்து, திருப்பதி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா ஆகியோர் உத்தரவின்பேரில் அனுமதி பெறாத வியாபாரிகள், பிச்சைக்காரர்களை பிடித்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்று திருப்பதியில் விடும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
அப்போது திருமலையில் உள்ள கல்யாணக்கட்டா, எஸ்.வி. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பிச்சைக்காரர்கள், அனுமதி பெறாத வியாபாரிகள் என மொத்தம் 82 பேர் அடையாளம் காணப்பட்டு, திருமலையில் இருந்து வாகனங்கள் மூலம் அழைத்துச் சென்று திருப்பதியில் விடப்பட்டனர். முன்னதாக அவர்களின் கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.
அதேபோல், கடந்த ஆகஸ்டு மாதம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 75 பேர் வெளியேற்றப்பட்டனர். இனிமேல், யாரேனும் திருமலைக்கு வந்து பக்தர்களிடம் பிச்சையெடுத்தாலும், அனுமதியின்றி வியாபாரம் செய்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.