துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இதில் நேற்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் மோதின. இதில் டாஸ் ஜெயித்த வங்காளதேச பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 75 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரிசாத் ஹூசைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.அடுத்து 169 ரன் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி கடைசி லீக்கில் நாளை இலங்கையை சந்திக்கிறது. இறுதிப்போட்டி 28-ந்தேதி நடக்கிறது.
சஞ்சு சாம்சன் நேற்று நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் விழுந்தும் சஞ்சு சாம்சன் களமிறங்காமல் இருந்தார்.அவரை மீண்டும் அணியில் இருந்து கழற்றி விட நிர்வாகம் முயற்சிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த பிறகு இது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில் நீங்கள் எந்த வரிசையில் விளையாட விருப்பமாக உள்ளீர்கள் என கேட்கப்பட்டது.அதற்கு சஞ்சு சாம்சன் அளித்த பதில் பின்வருமாறு,
40 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து நாட்டின் உயரிய விருது பெற்ற மோகன்லால், எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். நானும் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடுகிறேன். அதனால், ஹீரோவாக மட்டுமாகவே இருப்பேன் என்று சொல்லமாட்டேன். சில நேரங்களில் வில்லன், காமெடியனாகவும் இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் இறங்கி விளையாட வேண்டும். என அவர் கூறினார்.