ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்டங்களையும் துவக்கி வைத்தார். 3 வந்தே பாரத் ரெயில்களை துவக்கி வைத்தார். அணுமின் நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அரசு துறைகளில் புதிதாக நியமிக்கப்பட்டோருக்கு 15,000க்கும் மேலான பணி நியமன கடிதம் வழங்கினார் பிரதமர் மோடி. அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நவராத்திரி அன்று 9 வகையான சக்திகளை நாம் வணங்குகிறோம். நாடு மின்சார வேகத்தில் முன்னேறி வருகிறது. இந்த வேகம் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியது. இந்தியாவின் மின் திறனின் புதிய அத்தியாயம் ராஜஸ்தான் மண்ணிலிருந்து எழுதப்படுகிறது. ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம், மராட்டியத்தில் ரூ.90,000 கோடிக்கு மேல் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் அரசு புறக்கணித்தது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னும் நாட்டில் 18,000 கிராமங்களில் மின் கம்பங்கள் இல்லை. 2014 ல் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்த போது, 2.5 கோடி வீடுகள் மின்சார வசதி இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கி, 25 மில்லியன் வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கினோம்.
மக்களை கொள்ளையடித்து, ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரசால் ஏற்பட்ட காயத்தை பாஜ அரசு குணப்படுத்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில், வினாத்தாள் கசிவுக்கு மையமாக ராஜஸ்தான் இருந்தது. ஜல்ஜீவன் இயக்கம், ஊழல் காரணமாக நிறுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததுடன், பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றங்கள் மற்றும் சட்டவிரோத மதுபான தொழில் வளர்ந்தது. ஆனால், பாஜ ஆட்சிக்கு வந்ததும், நாங்கள் சட்டம் ஒழுங்கை பலப்படுத்தினோம். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினோம்.
ஆதிவாசி சமூகத்தினரை காங்கிரஸ் எப்போதும் புறக்கணித்தது. அவர்களின் தேவைகளை அக்கட்சி புரிந்து கொண்டது கிடையாது. ஆனால் பாஜ அரசு அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு என தனி இலாகாவை உருவாக்கினோம். வாஜ்பாய் ஆட்சியில் பழங்குடியினருக்கு என முதல்முறையாக தனி இலாகா உருவாக்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சியின் கீழ் நிலைமைகள் எப்படி இருந்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். காரணம், காங்கிரஸ் குடிமக்களைச் சுரண்டுவதில் மும்முரமாக இருந்தது. அவர்கள் நாட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடித்துக்கொண்டிருந்தனர். வரி மற்றும் பணவீக்கம் வானளாவ உயர்ந்தது. எங்கள் அரசாங்கம் காங்கிரசின் கொள்ளையை நிறுத்தியது. அவர்களின் கோபத்திற்கும் இதுவே காரணம்
ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழாவை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடி வருகிறது. தினசரி பயன்படுத்தும் பொருட்கள் விலை குறைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.