India vs Srilanka: ஆசிய கோப்பை 2025 தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 போட்டி ஒரு இறுதி போட்டி போல பரபரப்பாக நடைபெற்றது. இந்த விறுவிறுப்பான சூப்பர் ஓவர் வரை சென்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும், அந்த சூப்பர் ஓவரில் நடந்த ஒரு விநோதமான சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும், வர்ணனையாளர்களையும் ஒருசேர குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இலங்கை அணியின் வீரர் தசுன் ஷானகா சஞ்சு சாம்சனால் ரன் அவுட் ஆகியும், கிரிக்கெட்டின் ஒரு சிக்கலான விதியின் காரணமாக அவர் நாட்-அவுட் என்று அறிவிக்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source
சூப்பர் ஓவரில் நடந்த விநோத சம்பவம்
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 202 ரன்கள் அடித்த நிலையில், இலங்கை அணியும் 20 ஓவர் முடிவில் 202 ரன்கள் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் பந்துவீசினார். முதல் பத்திலேயே கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழந்தார். 2வது பந்தில் 1 ரன்னும், 3வது பந்தில் ரன் எதுவும் அடிக்கவில்லை. அர்ஷ்தீப் வீசிய 4வது பந்தையும் ஷானகா அடிக்க தவறினார். பந்து விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் கைகளுக்கு சென்றது. உடனே Caught Behind என்று இந்திய அணி வீரர்கள் அப்பீல் செய்ய, நடுவர் சிறிது யோசனைக்கு பிறகு ஷானகாவிற்கு அவுட் கொடுத்தார்.
நடுவர் அவுட் கொடுத்த பிறகும், ஷானகா ரன் ஓட முயற்சித்தார். பந்து சஞ்சு சாம்சனின் கைகளில் இருந்த போதும் அவர் ஓடினார். சுதாரித்துக் கொண்ட சாம்சன், பந்தை நேரடியாக ஸ்டம்பில் அடித்து, ஷானகாவை ரன் அவுட் ஆக்கினார். ஷானகா அப்போது கிரீஸிற்கு வெகு தொலைவில் இருந்தார். 2 விக்கெட் விழுந்ததால் இலங்கை அணியின் சூப்பர் ஓவர் இன்னிங்ஸ் முடிந்துவிட்டது என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், கிரிக்கெட்டின் சிக்கலான விதிமுறைகள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
WHAT A THROW BY SANJU SAMSON pic.twitter.com/uGetbpf2oZ
— Johns. (@CricCrazyJohns) September 26, 2025
விதி சொல்வது என்ன?
ஷானகா ரன் அவுட்டிலிருந்து தப்பித்ததற்கு, கிரிக்கெட்டின் விதி 20.1.1.3 தான் காரணம். அந்த விதியின்படி, கள நடுவர் ஒரு பேட்ஸ்மேனுக்கு கீப்பர் கேட்ச் (Caught Behind) போன்ற முறையில் அவுட் கொடுத்துவிட்டால், அந்த நொடியிலேயே பந்து டெட் ஆகிவிடும். அதாவது, அதன் பிறகு அந்த பந்தில் வேறு எந்த ஆட்டமும் அதாவது ரன் எடுப்பது, ரன் அவுட் செய்வது போன்றவை செல்லுபடியாகாது. இந்த சம்பவத்தில், நடுவர் ஷானகாவிற்கு Caught Behind அவுட் கொடுத்த உடனேயே பந்து டெட் ஆகிவிட்டது. அதனால், சஞ்சு சாம்சன் செய்த ரன் அவுட் செல்லாது.
இதற்கிடையே, ஷானகா நடுவரின் Caught Behind முடிவிற்கு எதிராக DRS முறையீடு செய்தார். UltraEdgeல் பந்து அவரது பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. எனவே, நடுவரின் அவுட் முடிவு திரும்ப பெறப்பட்டது. முடிவில், ஷானகா ரன் அவுட்டிலிருந்தும் தப்பித்தார், Caught Behind அவுட்டிலிருந்தும் தப்பித்தார். இந்த விதிமுறை இந்திய வீரர்களுக்கு நடுவரால் விளக்கப்பட்டது. இவ்வளவு குழப்பத்திற்கு பிறகு அடுத்த பந்திலேயே அர்ஷ்தீப் சிங், ஷானகாவை ஆட்டமிழக்க செய்தார். இலங்கை அணி சூப்பர் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், வனிந்து ஹசரங்கா வீசிய முதல் பந்திலேயே 3 ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்தார்.
SIX CONSECUTIVE WIN FOR INDIA IN ASIA CUP 2025
– Surya Army is Roaring. pic.twitter.com/9vBDfvXIiB
— Johns. (@CricCrazyJohns) September 26, 2025
About the Author
RK Spark