ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அசத்தல் சாதனை படைத்தது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தொடரின் ஆரம்ப லீக் சுற்றில் இருந்து சிறப்பாக விளையாடி, தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பதிவு செய்து சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
Add Zee News as a Preferred Source
சூப்பர் 4 சுற்றிலும் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வென்று இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அங்கு பாகிஸ்தான் அணியை துபாய் மைதானத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆசிய கோப்பை டி20க்கான சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இத்தொடரை கைப்பற்றியது. இது இந்திய ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றி 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணிக்கு பெரிய ஊக்கமாக மாறியுள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய அணிக்கு 21 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “இந்திய அணியின் இந்த வெற்றி மிகச் சிறப்பு வாய்ந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, ரூ. 21 கோடி பரிசுத்தொகையை அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அளிக்க இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளது.
இந்த பரிசு இந்திய அணி முழுவதிலும் பொது ஊக்கமாக நிச்சயமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் சாம்பியனாக சாதனை படைத்துவரும் இந்த வெற்றி கிரிக்கெட் உலகில் மேலும் பல சாதனைகள் குவிக்க உதவும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.
முன்னதாக ஆசிய கோப்பை இறுதி போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய பின்னர் சாம்பியன் பட்டத்தை வழங்க ஆசிய கவுன்சில் தலைவர் அழைத்தபோது, இந்தியர்கள் அதை நிராகரித்துவிட்டு சென்றனர். கோப்பையை பெறாமல் இந்திய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ், வெற்றி பெற்ற தொகையை பகல்காமில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji