அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தைக் காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
120 சட்டமன்றத் தொகுதிகளைக் கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக, ஒவ்வொரு தொகுதிக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.

குறிப்பாக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கியப் பிரச்னைகளையும், தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாததைப் பட்டியலிட்டும் பேசி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அ.தி.மு.க பிரச்சாரக் கூட்டத்தில் தவெக கொடியினைப் பிடித்தபடி சிலர் நின்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி,
‘அ.தி.மு.க-வால் அமைக்கப்படும் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும். அங்கு பாருங்கள் கொடி பறக்குதா, பிள்ளையார் சுழி போட்டாங்க, எழுச்சி ஆரவாரம்.
குமாரபாளையத்தில் நடைபெறும் எழுச்சி ஆரவாரம், ஸ்டாலின் செவியைத் துடைத்துக் கொண்டு போகும்’ என்று பேசினார். இதை பேசியவுடன் அ.தி.மு.கவினர் உற்சாகமடைந்தனர்.

கரூர் சம்பவத்தில் த.வெ.க-வுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க கூட்டணியில் த.வெ.க இணைய உள்ளதை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.