புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி கடந்த வியாழக்கிழமை டெல்லிக்கு வந்தார். ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர் இந்தியாவுக்கு முதல் முறையாக வந்துள்ளார்.
தனது 7 நாள் இந்தியப் பயணத்தின் இரண்டாவது நாளில் அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு வர்த்தகம், மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.
பின்னர் அவர் டெல்லியில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது சர்ச்சையாகி உள்ளது. அதில், டெல்லியின் பெண் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. தலிபான் பெண்களுக்காக இந்தியாவின் பெண் பத்திரிகையாளர்கள் அக்கூட்டத்தில் கேள்வி எழுப்பும் வாய்ப்பும் இல்லாமல் போய் உள்ளது. பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் பதிவாகின. இதே கருத்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். முக்கியமான இந்த சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் இல்லாதது தலிபான் ஆட்சியின் கீழ் பெண்களின் அவலநிலையை எடுத்துக் காட்டுவதாகவும் கருத்துகள் பதிவாகி உள்ளன.
கடந்த ஆகஸ்ட் 2021-ல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டதாகக் கருதப்படுகிறது. இதை, சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் அந்நாட்டின் மீது ‘பாலின இனவெறி’ என்று முத்திரை குத்தியுள்ளனர். கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் ஒரே வாரத்தில் மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 2,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆண் மீட்புப் பணியாளர்கள் பெண்களைத் தொட்டுத் தூக்கி உதவுவதற்கு தலிபான்கள் தடை விதித்தனர்.
இதன் காரணமாக, ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கப் பேரழிவில் பெண்கள் பாதிப்பு அதிகரித்தது. பெண் மீட்புப் பணியாளர்கள் வரும் வரை பாதிக்கப்பட்ட பெண்கள் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுபோல், பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்கின்றனர். பெண்களின் கல்வி மற்றும் வேலையில் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடைவிதித்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது.