புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் குற்றச்சாட்டு, பேராசிரியர் மாதவைய்யா பதவி நீக்கம்

காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் மாணவி ஒருவர், தன்னுடைய பேராசிரியர் மாதவைய்யா தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக சீனியர் மாணவிக்கு அனுப்பிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதையடுத்து மாணவர் காங்கிரஸ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்றவை, புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் குதித்தன.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்

`மாணவிகள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்கக் கூடாது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யா உள்ளிட்டவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழு 2015 விதிகளின்படி பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி கடந்த 09.10.2025 அன்று இரவு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்களை லத்தியால் கொடூரமாக தாக்கி, தலைமுடியைப் பிடித்து இழுத்து, ஷூ கால்களாலும் எட்டி உதைத்தனர் போலீஸார்.

தொடர்ந்து 6 மாணவிகள் உட்பட 24 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். அதனால் பல்கலைக்கழக வளாகம் பதற்றத்திற்குள்ளாகியிருக்கிறது.

அதையடுத்து மாணவர்கள் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

காரைக்கால் கிளை புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தரணிக்கரசு

இந்த சூழலில்தான், காரைக்கால் கிளையின் தலைவராக இருந்த பேராசிரியர் மாதவைய்யாவை, அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

அத்துடன், பேராசிரியர் தரணிக்கரசு என்பவரை அந்த பொறுப்பில் நியமித்து, புதுச்சேரி பல்கலைக்கழக இணையத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.