இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறாரா என்ற ஊகங்களையும், விவாதங்களையும் கிரிக்கெட் வட்டாரத்தில் தீவிரமாக எழுப்பியுள்ளது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த முக்கியமான தொடருக்கான அணியில் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெறாதது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
Add Zee News as a Preferred Source
இந்திய அணியின் வெற்றிக்கு பலமுறை முக்கிய பங்காற்றிய, அனுபவம் வாய்ந்த வீரரான ஜடேஜா நீக்கப்பட்டது அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இது குறித்து தொடர்ந்து விவாதித்து வந்த நிலையில், ஜடேஜா ஓய்வை அறிவிக்கலாம் என செய்திகள் பரவ தொடங்கி உள்ளது.
ரவீந்திர ஜடேஜா!
204 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 2,806 ரன்களையும், 231 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ஜடேஜா திகழ்கிறார். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்படக்கூடிய இவரது பங்களிப்பு, இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டை தாண்டி ஐபிஎல் தொடர்களிலும் அவர் ஒரு மதிப்புமிக்க வீரராக இருந்து வருகிறார்.
ஓய்வு வதந்திகளுக்கு ஜடேஜாவின் முற்றுப்புள்ளி
இந்த ஓய்வு குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், “2027ஆம் ஆண்டு உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நான் நிச்சயம் விளையாட விரும்புகிறேன். அதுவே எனது லட்சியம். ஆனால், அந்த முடிவு என் கைகளில் இல்லை. அணி நிர்வாகம், கேப்டன் மற்றும் தேர்வாளர்கள் தான் அது குறித்த இறுதி முடிவை எடுக்க வேண்டும்,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலிய தொடரில் இருந்து தன்னை நீக்கியதற்கான காரணத்தை அணி நிர்வாகம் தன்னிடம் தெளிவாக விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், தனது நீக்கத்திற்கான காரணம் குறித்து தனக்கு தெரியும் என்பதை அவர் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
Officially & unofficially last matches of Ravindra Jadeja in both white ball formats pic.twitter.com/9H9eiLmZhj
— Kunal. (@MSDignite) October 11, 2025
ஜடேஜா எதிர்காலம் என்ன?
ஜடேஜாவின் இந்த விளக்கம் தற்போதைக்கு அவரது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்ற அவரது ஆர்வம், அவர் தொடர்ந்து கிரிக்கெட்டில் தீவிரமாக ஈடுபடுவார் என்பதையே காட்டுகிறது. தேர்வாளர்களின் இந்த முடிவு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு உத்தியாகவோ அல்லது பணிச்சுமை மேலாண்மையின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எவ்வாறாயினும், ரவீந்திர ஜடேஜாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அணி நிர்வாகமும், தேர்வாளர்களும் எடுக்கும் முடிவுகளே இறுதியானது. அதுவரை, ஜடேஜாவின் ஆட்டத்தை ரசிகர்கள் தொடர்ந்து காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
RK Spark