கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. கொல்கத்தா நகரில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஒடிசா மாநிலம் ஜலேஸ்வர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளி கிழமை இரவு 8.30 மணியளவில் அந்த மாணவி ஆண் நண்பர் ஒருவருடன் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, திடீரென வந்த நபர் ஒருவர், அந்த மாணவியை மருத்துவமனை கட்டிடத்தின் பின்புறத்திற்கு இழுத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 5 பேருக்கு தொடர்பு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்கத்தா நகரில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கொடூர தாக்குதல் நடத்தியதில் பலியானார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டில் மற்றொரு மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் விசாரணை நடத்தி வந்த போலீசார், வழக்குடன் தொடர்புடைய 3 பேரை இன்று கைது செய்து உள்ளனர். தப்பியோடிய 2 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் மேற்கு வங்காள டாக்டர்கள் முன்னணி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், கல்வி மையங்களில் பெண்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது என கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கோரியுள்ளதுடன், இந்திய தலைமை நீதிபதி தானாக முன்வந்து, நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.