காபூல்: சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார் 58 ராணுவ வீரர்களும், 9 ஆப்கன் படையினரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது அண்மை காலத்தில் இரு தரப்புக்கும் இடையிலான மிக தீவிர மோதலாக அமைந்துள்ளது.
சமீப மாதங்களில், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் வகையில் தலிபான் படையினர் சனிக்கிழமை இரவு தாக்குதல் மேற்கொண்டதாக ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.
சவூதி அரேபியா மற்றும் கத்தார் தலையீடு காரணமாக சனிக்கிழமை இரவு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாக ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். “எல்லை பகுதி நமது முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளன, பாகிஸ்தானின் 25 ராணுவ நிலைகளை ஆப்கன் படையினர் கைப்பற்றி உள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தானின் 19 பாதுகாப்பு படை நிலையை பாகிஸ்தான் கைப்பற்றி உள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
“பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். நாங்கள் ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வந்தோம். அமைதிக்காக பாடுபடுகிறோம். முதலில் பாகிஸ்தான் தனது சொந்த நாட்டில் நிலவும் தீவிரவாத பிரச்சினையை கட்டுப்படுத்த வேண்டும். ஆப்கானிஸ்தானில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அல்லது டிடிபி உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் ஏன் தாக்குதலை தொடங்கியது என்பதை கேட்க வேண்டும். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் எங்களுக்கு வேறு வழி உள்ளது. எங்களுக்குள் உள்நாட்டு அளவில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு பிரச்சினை என்றால் நாங்கள் ஒன்றுபடுவோம். எங்கள் எல்லையினை பாதுகாப்போம்” என ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி தெரிவித்துள்ளார்.