பிஹார் தேர்தலில் 18 இடங்களில் போட்டியிடுவது உறுதி: சிபிஐ(எம்எல்) கட்சி உறுதி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தது 18 இடங்களில் போட்டியிடுவோம் என்றும், இன்னும் சில தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சிபிஐ-எம்எல் பொதுச் செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா கூறினார்.

பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நவம்பர் 6-ம் தேதி அன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் நவம்பர் 14 -ம் தேதி வெளியாக உள்ளன. பிஹாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜேடியு மற்றும் பாஜக கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 29 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகியவை தலா 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

ஆளும் கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. மகாகத்பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ-எம்எல், சிபிஐ, சிபிஎம் மற்றும் முகேஷ் சாஹ்னியின் விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சூழலில் சிபிஐ-எம்எல் லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபாங்கர் பட்டாச்சார்யா அளித்த பேட்டியில், “கடந்த முறை நாங்கள் போட்டியிட்ட 19 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மகா கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்னும் சில தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

பிஹார் கிராமப்புறங்களில் கட்சியின் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. எங்கள் கட்சி நாளை (அக்டோபர் 14) முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கும். ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் டெல்லியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்து கொண்டிருக்கின்றன. அதன் முடிவுகள் குறித்து எனக்குத் தெரியவில்லை. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஆர்ஜேடி அதன் சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகம் அனுசரித்துச் செல்லும் அதே வேளையில், காங்கிரஸ் மிகவும் யதார்த்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்

2020 தேர்தலில் போட்டியிட்ட 19 இடங்களில் 12 இடங்களை வென்று முக்கிய இடதுசாரி கட்சியாக மாறிய சிபிஐ-எம்எல், இந்த முறை சுமார் 40 இடங்களை எதிர்பார்த்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.