கோவை: களமிறங்கிய சின்னத்தம்பி – மீண்டும் தொடங்கிய `ரோலக்ஸ்’ யானை ஆபரேஷன்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும். முக்கியமாக நரசீபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதமலை சுற்றுவட்டாரங்களில் ஒரு ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வருகிறது.

ரோலக்ஸ் யானை

விளை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்தப்படுவதுடன், அவ்வபோது மனிதர்களையும் தாக்கி கொல்வதாக புகார் எழுந்தது. அந்த யானைக்கு உள்ளூர் மக்கள் ‘ரோலக்ஸ்’ என்று பெயரிட்டனர்.

விவசாயிகள் கோரிக்கையால் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக வனத்துறையினர் டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து நரசிம்மன், முத்து என்கிற 2 கும்கி யானைகளை அழைத்து வந்திருந்தனர். வன மருத்துவர் விஜய ராகவன், கடந்த மாதம் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தார்.

நரசிம்மன் யானை
முத்து யானை

அப்போது அந்த யானை அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிகழ்வு காரணமாக ‘ஆபரேஷன் ரோலக்ஸ்’ தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கும்கி யானைகள் நரசிம்மன், முத்து ஆகிய இரண்டுக்கும் திடீரென மதம் பிடித்தது. இதனால் அந்த யானைகள் பாதுகாப்பு கருதி, அந்த இரண்டு யானைகளும் மீண்டும் டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டன. அவற்றுக்கு பதிலாக டாப்ஸ்லிப்பில் இருந்து சின்னத்தம்பி கும்கி யானை கோவை வரவழைக்கப்பட்டுள்ளது.

கபில் தேவ் யானை
சின்னத்தம்பி யானை

ஏற்கனவே கபில்தேவ் என்கிற கும்கி யானையும் கோவை அழைத்து வரப்பட்டுள்ளது. இந்த 2 யானைகள் மூலம் ரோலக்ஸ் யானையை கண்காணித்து பிடிக்கும் முயற்சி நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.