ஜெருசலேம்,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. மேலும், பணய கைதிகள் பலரை ராணுவ நடவடிக்கை, ஒப்பந்தம் மூலம் இஸ்ரேல் மீட்டது. இந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சியால் இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. ஹமாஸ் தங்கள் வசம் உள்ள எஞ்சிய 20 இஸ்ரேலிய பணய கைதிகளை இன்று விடுதலை செய்கிறது. முதற்கட்டமாக 7 பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 13 பணய கைதிகள் இன்னும் சற்று நேரத்தில் விடுதலை செய்யப்பட்ட உள்ளனர். மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்ட மேலும் 28 இஸ்ரேலிய பணய கைதிகளின் உடல்களும் இன்று ஒப்படைக்கப்பட உள்ளன.
இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் போருக்குப்பின் காசாவில் அமைதியை கொண்டுவருவது தொடர்பாக காசா அமைதி ஆலோசனை கூட்டம் எகிப்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் எகிப்து அதிபர் எல் சிசி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்குமுன் ஹமாஸ் ஆயுதக்குழுவால் விடுதலை செய்யப்படும் இஸ்ரேலிய பணய கைதிகளை டொனால்டு டிரம்ப் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு வந்த டொனால்டு டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார்.