புதுடெல்லி: விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமைய உள்ள கூகுள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம், ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் ரூ.87,520 கோடி மதிப்பீட்டில் விசாகப்பட்டினத்தில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாரதத்தில் ஏஐ சக்தி என்ற பெயரில் புதுடெல்லியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நரலோகேஷ், கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, “ஆந்திரப் பிரதேசத்துக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இது ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துக்கும் இந்திய இளைஞர்களுக்கும் ஒரு திருப்புமுனை. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு நன்றி. இந்த திட்டத்தை விரைவாக நம் நாட்டுக்குக் கொண்டு வந்த கூகுள் நிறுவனத்தைப் பாராட்டுகிறேன்.
இந்தியாவில் பல மாற்றங்களை நான் கண்டிருக்கிறேன். இந்தியர்கள் தகவல் தொழில்நுட்பத்துக்குப் பெயர் பெற்றவர்கள். எந்த உலகளாவிய நிறுவனமாக இருந்தாலும் அதற்கு இந்தியர்கள்தான் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருப்பார்கள். அதுதான் நமது பலம். அது கூகுள், மைக்ரோசாஃப்ட் அல்லது வேறு எந்த நிறுவனவமாக இருந்தாலும், அவற்றுக்கு தலைமை வகிப்பவர்கள் இந்தியர்கள்தான். இந்த பலத்துடன் நாம் நமது செயற்கை நுண்ணறிவை திறம்பட பயன்படுத்த வேண்டும். வளர்ச்சிக்கான ஒரு புதிய பொருள் டேட்டா. இந்த திட்டத்தை ஆந்திரப் பிரதேசத்தில் தொடங்க எனக்கு வாய்ப்பளித்த இந்திய அரசுக்கு நன்றி.” என தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த திட்டம் இந்தியாவின் முதல் ஏஐ சிட்டிக்கான அடிக்கல். அமெரிக்காவுக்கு வெளியே மிகப்பெரிய ஏஐ தரவு மையமாக இது திகழும். கூடுதலாக, கூகுள் கேபிள் தரையிறங்கும் நிலையத்தை நடத்தும். இது நமது டிஜிட்டல் துறையை மேலும் வலுப்படுத்தும். இதன்மூலம், இந்தியா உலகை இணைக்கும் வசுதைவ குடும்பகம் என்ற உணர்வை கொண்டு வரும்.
விவசாயம், உற்பத்தி, சுகாதாரம், நிதி ஆகியவற்றில் மிக முக்கிய சவால்களை நிவர்த்தி செய்வதற்கு ஏஐ முக்கியமானது. இது மிக முக்கியமான துறைகளை மாற்றும். நமது மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வரும். நிர்வாகத்தை மேம்படுத்தும், வணிகங்களை மேம்படுத்தும், வாழ்க்கையை மேம்படுத்தும்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.