சென்னை: கேரள மாநிலத்தைப் பின்பற்றி, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் கோரும் பொது சேவைகளை 30 நாட்களில் வழங்காவிட்டால், அந்த சேவை வழங்கப்பட்டதாக கருதப்படுவதுடன், சேவையை வழங்கத் தவறிய அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் திருத்தப்பட்ட சேவை பெறும் உரிமைச் சட்டம் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, பொதுமக்கள் கோரும் அனைத்து சேவைகளும் அதிக பட்சம் 30 நாட்களில் வழங்கப்பட வேண்டும். ஒருவேளை மக்கள் கோரும் சேவையை வழங்க முடியாது என்றால், அதற்கான காரணங்களுடன் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும். கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் தேவை என்றால், அதை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து அதிகாரிகளே பெற்று கொள்ள வேண்டும்.
விண்ணப்பம் பெறுவது முதல் சேவை வழங்குவது வரையிலான அனைத்துக் கட்டங்களும் டிஜிட்டல் வடிவில் சேகரித்து வைக்கப்பட வேண்டும் என்று கேரள சட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் கேரள அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், இது தொடர்பாக திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லுறவை வைத்திருக்கிறார். ஆனால், கேரளத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து பொருள்களுக்கும் கொள்முதல் விலை, சேவை பெறும் உரிமைச் சட்டம் போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்த மு.க.ஸ்டாலினுக்கு மனம் வரவில்லை.
தமிழக மக்கள் நலனில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே, வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும். இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.