கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகர் சரத்குமார் ஆறுதல்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் ஆறுதல் கூறினார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பாஜக பிரமுகரான நடிகர் சரத்குமார் இன்று கரூருக்கு வந்தார்.

கூட்ட நெரிசலில் உயிரிழந்த கரூர் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த சகோதரிகளான பழநியம்மாள், கோகிலாவின் வீட்டுக்குச் சென்ற சரத்குமார், சிறுமிகளின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியது: “கரூர் உயிரிழப்பு சம்பவம் நடக்கக்கூடாத வேதனையான சம்பவம். இந்த துயரத்தில் இருந்து அவர்களின் குடும்பத்தினர் மீண்டு சமநிலைக்கு வந்த பிறகு, அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான உதவிகளை செய்வதற்கான முனைப்பு என்னிடம் இருக்கிறது. இதில், அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. மனிதநேயத்தின் நிலைப்பாடு.

இந்த சம்பவம் நிகழ்ந்த நாளில் நான் ஊரில் இல்லை. அதனால், தற்போது சிபிஐ விசாரணை குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் முடிவு செய்யும். என் மனவேதனையை மட்டுமே பகிர்ந்துள்ளேன். என்னை பொறுத்தவரை எங்கு துயர சம்பவம் நிகழ்ந்தாலும், அங்கு நான் இருக்க வேண்டும் என நினைப்பேன்” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து, இச்சம்பவத்தில் உயிரிழந்த வடிவேல் நகர் காவலர் குடியிருப்பில் உள்ள சுகன்யாவின் வீட்டுக்குச் சென்று, அவர் படத்துக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.