செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகை மாற்றியமைத்து வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்திய வம்சாவளி இணை நிறுவனர் அரவிந்த் சீனிவாஸ் தலைமையிலான Perplexity செயலி, இந்திய டிஜிட்டல் உலகில் ஒரு மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும், அனைத்து பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து, இந்தியாவின் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக இது உருவெடுத்துள்ளது. உலக புகழ்பெற்ற Chat GPT, கூகுள் ஜெமினி மற்றும் உள்நாட்டு போட்டியாளரான சோஹோவின் Arattai போன்ற செயலிகளை பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை பெர்பிளெக்சிட்டி நிகழ்த்தியுள்ளது. இந்த வெற்றி, இந்திய தொழில்நுட்ப துறையின் உலகளாவிய போட்டியிடும் திறனுக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. பெர்பிளெக்சிட்டி தலைமை செயல் அதிகாரி அரவிந்த் சீனிவாஸ், தனது எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்து, இந்தியாவின் இந்த வரவேற்பிற்கு கொண்டாட்டத்தை தெரிவித்தார்.
Add Zee News as a Preferred Source
சாதனையின் பின்னணி என்ன?
பெர்பிளெக்சிட்டியின் இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் பல முக்கிய காரணங்கள் உள்ளன. இது ஒரு சாதாரண சாட்பாட் போல இல்லாமல் தேடல், உரையாடல் மற்றும் உற்பத்தித்திறன் கருவிகளை ஒருங்கிணைத்த ஒரு மேம்பட்ட Answer Engine செயல்படுகிறது. பயனர்களின் கேள்விகளுக்கு இணையத்தில் இருந்து தகவல்களை தொகுத்து, நம்பகமான ஆதாரங்களுடன் பதில்களை வழங்குவது இதன் முக்கிய சிறப்பாகும். இது தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய உதவுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல்லுடன் பெர்பிளெக்சிட்டி ஒரு முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான பெர்பிளெக்சிட்டி ப்ரோ சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இது லட்சக்கணக்கான புதிய பயனர்களை இந்த செயலிக்குள் கொண்டு வந்துள்ளது. படங்கள், ஆடியோ, வீடியோ மற்றும் PDF போன்ற கோப்புகளை பதிவேற்றி, அதிலிருந்து தகவல்களை பகுப்பாய்வு செய்யும் வசதி, ஆழமான தேடல் மற்றும் GPT-5, Claude 4.0 போன்ற உலகின் முன்னணி AI மாடல்களை பயன்படுத்தும் வாய்ப்பு ஆகியவையும் இதன் வெற்றிக்கு காரணம்.
இந்திய தொழில்நுட்ப துறையில் புதிய போட்டி
பெர்பிளெக்சிட்டியின் இந்த எழுச்சி, இந்திய தொழில்நுட்ப துறையில் ஒரு ஆரோக்கியமான போட்டியையும் உருவாக்கியுள்ளது. சமீபத்தில், சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் அரட்டை மெசஞ்சர் செயலி, இந்திய ஆப் ஸ்டோர்களில் முதலிடத்தை பிடித்தது. தற்போது, இந்திய வம்சாவளியை சேர்ந்த அரவிந்த் சீனிவாசின் பெர்பிளெக்சிட்டி அந்த இடத்தை பிடித்துள்ளது. இது, உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப தயாரிப்புகளை இந்தியாவிலேயே உருவாக்கும் திறன் வளர்ந்து வருவதை காட்டுகிறது.
இந்தியர்களின் விருப்பமான AI
கோடிக்கணக்கான பதிவிறக்கங்கள் ஒரு விஷயத்தை தெளிவாக காட்டுகின்றன. இந்தியர்கள் தற்போது தங்களுக்கென உருவாக்கப்பட்ட ஒரு AI தீர்வாக பெர்பிளெக்சிட்டியினை ஏற்றுக்கொண்டுள்ளனர். உள்ளூர் செய்திகள், அரசு திட்டங்கள், கிரிக்கெட் ஸ்கோர்கள் என இந்திய பயனர்களின் தேவைகளை புரிந்து, பன்மொழி ஆதரவுடன் இது செயல்படுவது, இதன் பரவலான வரவேற்புக்கு முக்கிய காரணமாகும். இது வெறும் தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் டிஜிட்டல் தற்சார்பு பயணத்தில் ஒரு பெருமைக்குரிய தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா, இன்று உலகின் சிறந்த கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் நிற்கிறது என்பதற்கு பெர்பிளெக்சிட்டியின் இந்த வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
About the Author
RK Spark